சேமிக்கச் செயல்படுவோம்
மரம்வளர மழைதான் வேண்டும்;
மழையிருந்தால் தண்ணீர் கிட்டும்;
தரம்நிறைந்த தண்ணீ ரையே
தரையடியில் சேமிப் போம்நாம்!
கனமழையில் நீர்சே மித்தால்
காடெல்லாம் செழித்தே ஓங்கும்;
வனம்நிறைந்த புவியில் என்றும்
வற்றாத மழைநீர் கிட்டும்!
ஆறுகுளம் ஏரி தன்னை
ஆழமுடன் செப்ப னிட்டால்
சீறுமழைக் கால வெள்ளம்
சேமிப்பாய் ஆகும் திண்ணம்!
நதியெல்லாம் ஒன்றி ணைத்தால்
நாடெல்லாம் செழிப்பா யாகும்;
நிதியாக இயற்கை ஈந்த
நீர்க்கொடையைச் சேமிப் போம்நாம்!
நீரில்லாப் புவியில் ஏதும்
நிலைத்தென்றும் வாழ்வ தில்லை;
மாரியிங்கே பொழிவ தற்கு
மரம்நிறைந்த வனங்கள் காப்போம்!
மழை,புவி,நீர் மூன்றும் மண்ணில்
மகத்தான ஒன்றி ணைப்பாம்;
விழைந்தவற்றைக் காப்ப தற்கு
விரைந்துசெயல் படுவோம் நாமே!<
(உலக பூமி நாள் – மார்ச் 20
உலக வன நாள் – மார்ச் 21
உலக நீர் நாள் – மார்ச் 22)
– கே.பி.பத்மநாபன்,
சிங்காநல்லூர்