பாடல் தரும் படிப்பினை
பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,
பள்ளிக்கூடம் எல்லாம் திறந்து, கொரோனா கொடுந்தொற்றுக்கு முன் இருந்தது போல வகுப்பறை நிரம்ப, ஆசிரியர்களிடம் பாடம் கேட்டு, நண்பர்களுடன் அமர்ந்து மகிழும் வாய்ப்பு மீண்டும் வந்துவிட்டதல்லவா? மகிழ்ச்சிதானே!
‘அந்த நாளும் வந்திடாதோ’ என்று நீங்கள் எல்லாம் ஏங்கியதற்கு ஒரு முடிவு வந்துவிட்டது. ஆனால், அறவே இனி தொல்லை இல்லை என்றும் அலட்சியமாய் இருந்திடக்கூடாது _ எப்போதும் விழிப்போடு இருக்கணும், இன்னும் முற்றாகத் தொற்று நின்றுவிடவில்லை. மறவாதீர் செல்லங்களே!
அப்புறம் இப்போது தேர்வுக்கு நல்லா ஆயத்தம் ஆகணும்தானே!
நல்லா துணிவா எழுதுங்கள், கொஞ்ச நாளைக்கு… தேர்வு முடியும் வரைக்குமாவது நாள்தோறும் உங்க கைத்தொலைபேசியை எப்போதும் நோண்டிக் கொண்டு நேரத்தை வீணாக்குவதற்கு விடுமுறை கொடுங்கள்.
தேவைப்படும்போது பயன்படுத்துவதற்குத்தான் கைத்தொலைபேசி _ செல்ஃபோன். கண்ட நேரத்திலும் விளையாடி, அப்பா, அம்மா, ஆசிரியர்களுக்கு மன வேதனையை உண்டாக்குவதற்கு அல்ல செல்லங்களே _ புரியுதா?
நீங்கள் எல்லாரும் நிறைய நல்ல புத்தகங்களை வீட்டிலோ, அருகில் உள்ள பொது நூலகங்களிலோ சென்று படிக்க வேண்டும்.
“நூலைப்படி நூலைப்படி’’ என்று நம்ம புரட்சிக்கவிஞர் தாத்தா விடாது படிக்கச் சொன்னாரே, ஞாபகம் இருக்கா?
காலையில் படி, கடும்பகல் படி, மாலையில் படியுங்கள். அத்தனை வேளைகளிலும் படிப்பது நல்லதுதான். முடியலேன்னா ஒரு வேளையாவது நல்லா படிங்க.
பாடப் புத்தகங்களை மட்டும்தான் படிக்கணும்னு நினைக்காதீங்க; பொது நூல்களைப் படியுங்கள். போன மாசம் ஒரு கதை நூலை உங்களுக்கு அறிமுகப்படுத்தி, அதை வாங்கிப் படிக்கணும்னு எழுதினேனே, நினைவிருக்கா?
அதுமாதிரி விடுமுறையிலோ, அல்லது வேறு நாள் கிடைக்கும்போதோ நம்ம புரட்சிக்கவிஞர் தாத்தாவின் கவிதைகள் படிக்கணும், பெரியார் தாத்தாவின் வாழ்க்கை வரலாறு படிக்கணும். நம் பெரியார் பிஞ்சு பதிப்பகத்திலே உங்களுக்காகவே அழகழகாய் பல வண்ணத்திலே அச்சிட்டு பல புதிய புத்தகங்களைக் கொண்டு வந்திருக்காங்களே, அதையெல்லாம் வாங்கிப் படிக்கிறீங்களா?
சென்னையில் புத்தகக் காட்சி நடந்தபோது, குழந்தைகள் நூல்களைத்தேடி, பல குழந்தைகள் வாங்கிக்கிட்டுப் போனது ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கு. உணவுக்குத் தின்பண்டம் தேவை உங்களுக்கு; அதுபோல, அறிவுக்கு இந்தப் புத்தகங்கள் முக்கியமல்லவா?
புரட்சிக்கவிஞர் தாத்தா உங்களுக்காகவே ரொம்ப ரொம்ப எளிமையாய் ‘இளைஞர் இலக்கியம்’ அப்படின்னு ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பையே எழுதிட்டுப் போயிருக்கிறார். அதை வாங்கிப் படிச்சு மகிழ்ச்சி அடைவதோடு, வாழ்க்கையிலே நீங்க முன்னேற எப்படி வழி சொல்லியிருக்கிறார் பார்க்கிறீங்களா?
செல்லங்களே, நீங்க எல்லாம் வாழ்க்கையிலே எப்படி பாதுகாப்பா வளருணுமுன்னு அவர் உங்களுக்கு அருமையான கவிதை மூலம் பாடஞ்சொல்லிக் கொடுக்கிறாரே, கேக்குறீங்களா?
‘ஏமாறாதே’ என்ற தலைப்புலே ஒரு அருமையான கவிதை. நான்கூட படிச்சுப் படிச்சு ரொம்ப ரசிச்சேன்.
“ஆரஞ்சிப் பழத்தையும் தம்பி _ நீ
ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு’’
நீங்க தனியாய்ப் போய் பழம் வாங்கப் போனா, காசைக் கொடுத்தோம், ஏதோ ஒன்றை வாங்கிக்கிட்டு உடனே வந்தோம் என்றும் இருக்கக் கூடாது. அங்கே போய் ஏமாந்து வரலாமா?
அங்கே அப்போ ஏமாந்தா _ வாழ்க்கை பூரா அப்படியே நீங்க ஏமாளியாய் இருந்தா முன்னேற முடியுமா?
எனவே, இந்தப் பாட்டின் படிப்பினை ரொம்ப ரொம்ப முக்கியம்.
இந்த உலகத்திலே ஏமாத்திப் பிழைக்கிறவங்க ஏராளம். அதனால், சின்ன வயசில இருந்தே நாம கவனமாக இருக்கணும். சின்னச் சின்ன விஷயத்திலேகூட, இல்லையா?
அந்தப் பாட்டை நல்லா படியுங்க. அவர் சொல்ற கருத்தைப் புரிஞ்சுக்கோங்க.
முதல்லே இருந்து படிப்போமா?
ஏமாறாதே!
ஆரஞ்சுப் பழத்தையும் தம்பி-நீ
ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு.
நீர்சுண்டி இருக்கவும் கூடும்-அது
நிறையப் புளிக்கவும் கூடும்.
ஓர்ஒன்றை உண்டுபார் தம்பி-உனக்கு
உகந்ததென் றால்அதை வாங்கு.
பாரெங்கும் ஏமாற்று வேலை-மிகப்
பரவிக்கி டக்கிறது தம்பி!
அழுகிய பழத்தையும் தம்பி-அவர்
அன்றைக்குப் பழுத்ததென் றுரைப்பார்.
புழுக்கள் இருப்பதுண்டு தம்பி-உள்
பூச்சி இருப்பதுண்டு தம்பி.
கொழுத்த பலாப்பழத்தி னுள்ளே-வெறும்
கோது நிறைந்திருக்கும் தம்பி.
அழுத்தினா லும்தெரி யாது-அதை
அறுத்துக் காட்டச் சொல் தம்பி.
நெய்யிற் கொழுப்பைச் சேர்த்திருப்பார்-அதை
நேரில் காய்ச்சிப்பார் தம்பி.
துய்ய பயறுகளில் எல்லாம்-கல்
துணிக்கை* மிகவும் சேர்ப்பார்கள்.
மையற்ற வெண்ணெயென் றுரைப்பார்-அதில்
மாவைக் கலப்பார்கள் தம்பி.
அய்யப்பட வேண்டும் இவற்றில்-மிக
ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு.
வகுத்து வகுத்துச்சொல் வார்கள்-அதன்
வயணத்தை ஆராய வேண்டும்.
பகுத்தறி வழியாச் சொத்தாம்-அதைப்
பாழாக்கக் கூடாது தம்பி!
நகைத்திட எதையும்செய் யாதே-மிக
நல்லொழுக் கம்வேண்டும் தம்பி.
தகத்தகப் புகழினைத் தேடு-நீ
தமிழரின் வழியினில் வந்தாய்.
(*கல் துணிக்கை – சிறுகற்கள்)
ஒரு பாட்டு _ எத்தனை பாடங்கள் பார்த்தீர்களா? பகுத்தறிவு அழியாச் சொத்து என்கிறார். அதை மனசிலே பதிய வையுங்கள் பிஞ்சுகளே!
அடுத்து சந்திப்போம்; அதுக்குள்ளே நீங்க இந்த இளைஞர் இலக்கியப் பாட்டுகளைப் படிச்சு எழுதுங்கள். நம்ம பெரியார் பிஞ்சிலே போடுவோம். மகிழ்ச்சிதானே!
இப்படிக்கு,
பாசத்திற்குரிய
உங்கள் அன்புத் தாத்தா,
– ஆசிரியர் கி.வீரமணி