தம்பிக்குதிரையும் படையும்
“மேஜை 242இல் ஒரு போர்வீரனைக் காணோம்” என்று ஓர் அலறல் சத்தம். அதே மேஜையின் மன்னர்தான் அதனை அறிவித்தார். எல்லா காய்களின் பார்வையும் மேஜை எண் 242இன் மீது திரும்பியது. சென்னையில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 (2022) வரை நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டிக்காக ஒரு நவீன ஓட்டலில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். அந்த ஓட்டலில் ஒரு மிகப் பெரிய குளிரூட்டப்பட்ட அறையில் சுமார் 512 மேஜைகளையும், ஒவ்வொரு மேஜையிலும் ஒரு சதுரங்க அட்டையும் அதற்குத் தேவையான காய்களையும் வைத்திருந்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குத் தெரியாத ஒரு செய்தி -_ இரவு நேரங்களில் அந்தக் காய்கள் உயிர்பெற்று நடமாடும் என்பது.
இந்தப் போட்டிக்காக புதிய இலச்சினை வடிவமைத்திருந்தார்கள். அதற்கு ‘தம்பி’ என்று பெயர் வைத்திருந்தார்கள். அதே அறையில் தம்பியின் மிகப் பெரிய உருவச்சிலை வைத்திருந்தார்கள். தம்பி மனிதரைப்போன்ற கை மற்றும் கால்களும் குதிரையின் தலையையும் கொண்டு இருந்தது. நன்றாகப் பளபளக்கும் வேட்டி சட்டையும் அணிந்து இருந்தது. அந்தத் தம்பிக்குதிரையும் இரவில் உயிர் பெறும். அதுவே அன்று அந்த பிரம்மாண்ட அறையில் தலைவனாகச் செயல்பட்டது.
“எந்த நிற போர்வீரனைக் காணவில்லை?”
மேஜை எண் 242இல் வெள்ளை ராஜா, “அது ஒரு கருப்பு வீரன்” என்றது. மேஜைக்கு அடியிலும் பக்கத்து மேஜை என எல்லா இடங்களிலும் தேடினார்கள். தம்பிக்குதிரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஒரு ராஜா, இரண்டு ராணிகள், நான்கு மந்திரிகள், அய்ந்து படைவீரர்கள் என அந்தக் குழு அமைந்தது. அவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள். முதலில் அந்த மேஜை 242இல் இருக்கும் சதுரங்கக் காய்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
“நீங்க யாராச்சும் அவரை சரியாகப் போர் செய்யலைன்னு திட்டினீங்களா?”
“அவர் அய்ஸ்கிரீம் வேணும்னு கேட்டாரா?”
“எப்போது அவரை கடைசியாகப் பார்த்தீர்கள்?”
இப்படி பல கேள்விகள் கேட்டு விசாரணை நடந்தது. அதில் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
தம்பிக்குதிரைக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த அறையில் பல சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தி இருந்தார்கள். அவற்றில் கண்டிப்பாக இந்த சதுரங்க வீரர் எங்கே மறைந்தார் என்ற காட்சி பதிவாகி இருக்கும் என்று நம்பியது. கண்காணிப்பு அறையில் யாரும் இல்லை. தம்பிக்குதிரையும் அவர் குழுவும் அங்கே குழுமினார்கள். எந்தக் கேமரா மேஜை எண் 242இன்மீது இருந்தது என்று பார்த்தார்கள். காலையில் இருந்து பலரும் அங்கே வந்து விளையாடி இருக்கின்றார்கள். இரண்டு போலிஸ் கான்ஸ்டபிள்கள், இரண்டு பள்ளி ஆசிரியர்கள், கடைசியாக இரண்டு சிறுவர்கள். ஒரு பையன் சிவப்பு நிறச் சட்டையும் ஒரு பையன் பூப்போட்ட சட்டையும் அணிந்து இருந்தார்கள். ஆனால், அவர்கள் சென்ற பின்னரும் அந்தச் சதுரங்க வீரன் அங்கே இருந்திருக்கின்றான்.
அப்படியே வீடியோவை ஓட்டி ஓட்டிப் பார்த்தார்கள். இரவு 10:00 மணிக்கு மேல்தான் காணவில்லை என்று கண்டுபிடித்தார்கள். அப்போது மேஜை எண் 120இல் இருந்து தகவல் வந்தது “ஒரு போர்வீரர் டாய்லெட் பக்கமாகச் சென்றார். ஒரு கருப்பு யானையார் அவரைப் பார்த்ததாகச் சொல்லி இருக்கார்”
உடனே குழுவினர் 120ஆம் மேஜைக்குச் சென்றார்கள். அங்கே இருந்த சதுரங்கக் காய்கள் அனைவரும் இரவு உணவினை முடித்துவிட்டு வந்திருந்தார்கள்.
சரியாக 12:00 மணிக்கு அனைவருக்கும் இரவு உணவு அங்கே வழங்கப்படும். ஒரே ஒரு வேளை மட்டுமே உணவு. கருப்பு யானையார் ‘ஏவ்…’ என்று ஏப்பம் விடும் சத்தம் நன்றாகக் கேட்டது.
“கண்டிப்பாக நீங்க அந்த வீரர் செல்வதைப் பார்த்தீர்களா?”
“ஆமாம், அந்த வீரர் கண்களில் கண்ணீருடன் சென்றார். ஏய் யாருப்பா அதுன்னு அதட்டினேன். என்னை சட்டையே செய்யல. அதோ அந்த டாய்லெட் பக்கம்தான் போனாரு” என்றது யானையார்.
குழுவினர் அங்கே சென்றார்கள். தம்பிக்குதிரை மட்டும் நல்ல உயரம். மற்றவர்கள் பின் தொடர தம்பிக்குதிரை வேகமாக அந்த அறைக்குள் சென்றது. அதுவும் பெரிய அறையாக இருந்தது. எல்லோரும் ஒவ்வொரு பகுதியாகத் தேடினார்கள். எங்கும் காணவில்லை.
“அதோ இருக்கார் வீரர்…”
மந்திரி ஒருவர் திசை காட்ட, எல்லோரும் அந்த சன்னலைப் பார்த்தார்கள். சன்னலுக்கு மேலே இருந்து வெளியே பார்த்தபடி இருந்தார் அந்தச் சதுரங்க வீரர். அவரை முதலில் இறக்கினார்கள்.
“என்னப்பா ஏன் திடீர்னு இங்க வந்துட்ட? நாங்க எல்லாம் பதறிட்டோம் தெரியுமா?” என்றது தம்பிக்குதிரை.
எதுவும் பேசவில்லை. அதற்குள் அந்த அறையில் சதுரங்க வீரர்கள் எல்லோரும் குழுமிவிட்டார்கள். ஆயிரக்கணக்கில் இருந்தார்கள்.
“அட என்னான்னு சொன்னாத்தானே ஏதாச்சும் தீர்வு காண முடியும்”
மெள்ளப் பேச ஆரம்பித்தது சதுரங்க வீரர் காய்.
“இன்னைக்கு சாயிந்திரம் ரெண்டு குட்டிப்பசங்க விளையாட வந்தாங்க. பக்கத்து குடியிருப்பிலதான் இருக்காங்க போல. அதுல ரெண்டு பேரும் செம அருமையா விளையாடினாங்க! டக் டக்னு காய்களை நகர்த்தினாங்க. ரொம்ப நேரம் வெட்டாமையே விளையாடினாங்க. நாலஞ்சு விளையாட்டு விளையாடிட்டாங்க. ஆனா சோகம் என்னன்னா அவங்ககிட்ட சதுரங்க போர்டோ, காய்களோ எதுவுமே இல்லை. அவங்க சொன்ன அடையாளத்த வெச்சு அந்த சன்னல்ல இருந்து அவங்க வீடு எங்க இருக்குன்னு கண்டு-பிடிச்சிட்டேன்” என்றது.
மவுனம் நிலவியது.
“லீடர் இதுக்கு என்ன செய்ய முடியும்” என்று தம்பிக்குதிரை குழு மந்திரியார் கேட்டார்.
கொஞ்ச நேரம் யோசித்த தம்பிக்குதிரை, “சரி, ஒன்னு செய்வோம். யாரெல்லாம் அந்தப் பையன் வீட்டுக்குப் போகத் தயார்னு சொல்லுங்க. இந்த வீரர் தலைமையில் அங்க போய் அவங்க வீட்லயே இருந்து அவங்க விளையாட உதவலாம்” என்றது.
‘சர் சர் சர்’ என்று கைகள் உயர்ந்தன. மொத்தம் 64 கைகள். சரியாக இரண்டு செட் சதுரங்கக் காய்கள். கூடி இருந்த எல்லோரும் கை தட்டினார்கள்.
“சரி, நீங்க கிளம்புங்க, இங்க காய்கள் தொலைஞ்சதுன்னு மாற்றி வெச்சிடுவாங்க. பயப்பட வேண்டாம்!”
அறையில் இருந்த ஆயிரக்கணக்கான காய்களிடம் விடைபெற்று அந்த 64 காய்களும் ஓட்டை வழியே வெளியேறின.
“சீக்கிரம் நீங்க ஒரு மணி நேரத்தில அவங்க வீட்டை அடையணும், இல்லேன்னா உயிர் இழந்திடுவோம், பிறகு நடக்க முடியாது” என்று உற்சாகமூட்டியது தம்பிக்குதிரை.
பத்திரமாக அவர்கள் கிளம்பினாலும் தம்பிக்குதிரை சோகமாகவே இருந்தது. அவர்கள் குழுவில் இருந்த வயதில் சிறிய வீரர், ‘ஏன்?’ என்று கேட்டார்.
“சதுரங்கக் காய்கள் இருக்கு; ஆனா, போர்டு இல்லாமல் என்ன செய்வார்கள்?”
“அட, ஆமால்ல!”
“ஆமா.. இதை யோசிக்கலையே”
தம்பிக்குதிரை வேட்டியை மடித்துக்கட்டி, “உங்களால இந்தப் போர்டைத் தூக்க முடியாது, நான் தூக்க முடியும். ரெண்டு போர்டை நான் வெச்சிட்டு வேகமா வந்துடுறேன்” என்று கூறி, அங்கே சென்று போர்டை வைத்துவிட்டு வந்தது.