தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்
நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 35
நாம் இதுவரை நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றிற்கு மாற்றும்போது என்னவெல்லாம் மாற்றம் செய்ய வேண்டும் என்று 5 Steps வரை (5 படிகளில்) பார்த்தோம்.
இது 6ஆவது (Step) படிமுறை.
Step 6 இன்படி
நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மாற்றினாலோ அல்லது அயற்கூற்றிலிருந்து நேர்க்கூற்றுக்கு மாற்றினாலோ ஆங்கில இலக்கண அமைப்பின்படி சொற்களை இடமாற்றம் (Placement மாற்றத்தை) செய்ய வேண்டும்.
இதை நாம் தொடக்கம் முதலே செய்து வந்தோம். ஆனால், எப்படிச் செய்தோம் _ என்று தெரியாமல் மாற்றம் செய்து வந்தோம். இப்போது ஆங்கில முறைப்படி தெரிந்துகொள்ளலாம்.
இந்தவித இடமாற்றங்கள் (Placement) சாதாரணச் சொற்றொடர்களிலும், கட்டளைச் சொற்றொடர்களிலும் இருக்காது. பெரும்பாலும் கேள்விச் சொற்றொடர்களிலும், உணர்ச்சிச் சொற்றொடர்களிலும் தான் வரும்.
கீழே உள்ள சொற்றொடர்களில் ஆங்கில இடமாற்றத்தை மட்டும் பாருங்கள்!
எ.கா(1) (கேள்விச் சொற்றொடர்)
நேர்க்கூற்றில்:
இனியா தமிழ்மலரிடம், “நீ அஞ்சல் அலுவலகத்திற்கா சென்றுகொண்டிருக்கிறாய்?’’ என்று கேட்டாள்.
Iniya said to Tamizhmalar, “Are you going to Post office?” (இட மாற்றத்திற்கு முன்)
இதை அயற்கூற்றில்:
இனியா தமிழ்மலரிடம் அவள் அஞ்சல் அலுவலகத்திற்குத்தான் சென்று கொண்டிருந்தாளா என்றவாறு வினவினாள்.
Iniya asked Tamizh malar if she was going to Post office
(இடமாற்றத்திற்குப் பின்)
_என்று சொல்வோம்.
இங்கே…Are you என்பது she was என்றவாறு இடம் மாறியுள்ளது அல்லவா?
எ.கா: (2) (உணர்ச்சிச் சொற்றொடர்)
நேர்க்கூற்றில்:
இசைமொழி தேன்மொழியிடம், “என்னே அருமையான பாட்டு இது!’’ என்றாள்.
Isaimozhi said to Thenmozhi, “Wow! What a wonderful song this is!” (இட மாற்றத்திற்கு முன்)
இதை அயற்கூற்றில்:
இசைமொழி தேன்மொழியிடம் அந்தப் பாட்டு மிக அருமையாக இருந்ததாகச் சிலாகித்தாள்.
Isai mozhi exclaimed Thenmozhi that that song was very wonderful என்றவாறு இடம் மாறியுள்ளது அல்லவா?
உணர்ச்சித் தொடர்களில் very அல்லது much போன்ற சொற்களை (அயற்கூற்றில் மட்டும்) அழுத்தமாகச் சொல்வதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதை ஏற்கெனவே படித்துள்ளோம்.
ஆகவே, நமக்குத் தெரியும்… இதுவரை நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மா(ற்)றும்போது 6 படிமுறைகளைப் பயன்படுத்தினோம். _ என்று.
அதேபோல்தான்… அதே 6 படிமுறைகளை (அல்லது வழி முறைகளை) அயற்கூற்றிலிருந்து நேர்க்கூற்றுக்கு மா(ற்)றும்போதும் தலைகீழாகப் பயன்படுத்த வேண்டும்.
அதாவது, (நேர்க்கூற்று)
A → B (அயற்கூற்று)
என்பதிலிருந்து
B → A என்று
மாறும்போது,
பழைய (நேர்க்கூற்று)
A எப்படியிருந்ததோ அப்படியே மாற வேண்டும். அதாவது “மேற்கோள் குறி’’ வரவேண்டும், இணைப்புச் சொற்கள்
(Conjunction) நீங்க வேண்டும், இறந்த காலம் (Past – tense) நிகழ்காலமாக (Present – tense ஆக) மாறவேண்டும், மாற்றமடைந்த (முந்தைய நாள்) the previous day போன்றவை Yesterday (நேற்று) என்று மாற வேண்டும், இடமாற்றம் அடைந்த சொற்கள் மீண்டும் பழையபடி தலைகீழ் இடமாற்றம் அடைய வேண்டும்.