இனிமைத் தமிழைப் பாட வா!
எங்கும் தமிழை ஏற்ற வா
எதிலும் தமிழை ஏந்தி வா
மங்காத் தமிழைப் போற்ற வா
மாயா* மொழியை மதித்து வா!
கதிரே, கனியே ஓடி வா
கன்னல் தமிழைப் பாட வா
மதியே, மலரே ஓடி வா
மணக்கும் தமிழைப் பாட வா!
அன்பே, அறிவே ஓடி வா
அன்னைத் தமிழைப் பாட வா
இன்முகம் காட்டி வாவா வா
இனிமைத் தமிழைப் பாட வா!
அம்மா அப்பா மகிழவே
ஆசான் உன்னைப் புகழவே
எம்பிக் குதித்து இங்கே வா
இனிதாய்த் தமிழைப் பாட வா
முப்பால் தன்னை ஓதி வா
முதுமொழி தமிழைப் பாவி வா
தப்பா மல்நீ ஓடி வா
தமிழே மலரே தாவி வா!
நமது செல்வம் தாய்மொழி
நமக்கு அஃதே இருவிழி
அமிழ்தினும் இனிதாம் தமிழ்மொழி
அதனைப் போற்றிப் பாடுநீ!
– அழகுநிலவன்
புதுக்கோட்டை.