அளவோடு உண்க!
இட்டலியைச் சாம்பாரில் ஊற வைத்து
ஏழெட்டு சாப்பிட்டான் தொப்பை கிட்டு;
சுட்டெடுத்த தோசையுடன் சட்னி சேர்த்துச்
சுகமாக விழுங்கிட்டான் ஆறே ழெட்டு;
புட்டுடனே சர்க்கரைநெய் பிசைந்து போட்டுப்
‘பிடிபிடித்’தான் தண்ணீரைக் குடித்து விட்டு;
தட்டினிலே பொங்கலையும் வடையும் வைத்து
தொப்பையினை நிரப்பிட்டான் காலை வேளை!
அவியலுடன் பொரியலுடன் கூட்டும் சேர்த்து
அப்பளத்தை ஏழெட்டு சேர்த்துக் கொண்டு
குவிந்திட்ட மலைச்சோற்றில் குழம்பை ஊற்றிக்
கொத்தமல்லி ரசத்தையும் குடித்து விட்டுத்
தெவிட்டாமல் பாயசமும் உண்டுவிட்டுத்
திண்ணையிலே படுத்திட்டான் தொப்பை கிட்டு;
தவித்திட்டான் மாலையிலே வயிற்றுப் போக்கால்:
தம்பிகளே, அளவோடே உண்ணல் நன்று!!
– கே.பி. பத்மநாபன்
சிங்காநல்லூர், கோவை.