சிறார் கதை : உடைபடும் தடைகள்
ஆ.ச
அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆனாலும் காலையிலிருந்து அஞ்சலி மிகவும் உற்சாகமாய் இருந்தாள். அதற்குக் காரணம் அவர்கள் நகரின் நகர் மன்றத்தில் நடந்து வரும் புத்தகக் காட்சியின் கடைசி நாளான இன்று அவள் பங்கு பெறப்போகும் நடன நிகழ்ச்சியே! ஒரு குழுவாகக் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இந்த நாளுக்காகத் தான் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
மாலை 5 மணி. வாசலில் வந்து நின்ற ஆசிரியர் மலையின் வண்டியில் ஏறிக் கொண்டாள். அஞ்சலியின் அப்பா பிரபாகர் ஒரு மாற்றுத்திறனாளி. அஞ்சலிக்கும் இடது கால் உயரம் சற்றுக் குறைவு. எனவே ஆசிரியர் மலைதான் அவளை நகர்மன்றத்திற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தார்.
“அப்பா நான் கிளம்புறேன். நீங்க கொஞ்சம் பொறுமையா வாங்க” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.
நகர் மன்றம், மாலை 6 மணி. கடைசி நாளும், ஞாயிற்றுக்கிழமையுமானதால் அரங்கம் ஏற்கனவே நிரம்பியிருந்தது. “சார் நான் போய் இலக்கியா மிஸ்ஸப் பாக்குறேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்த அஞ்சலியைக் கையைப்பிடித்து நிறுத்தினார் மலை.
“எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் ‘சார்’ என்று கூப்பிடாத, இருபாலரையுமே ஆசிரியர் அல்லது இங்கிலீஷ்ல ‘டீச்சர்’ன்னு பொதுவா சொல்லணும்ன்னு” – செல்லமாகக் கடிந்து கொண்டார்.
“அய்யோ மறந்துட்டேன் சார். அய்யய்யோ மன்னிச்சுக்கோங்க டீச்சர், இனி சார்ன்னு சொல்ல மாட்டேன், இப்ப நான் போலாமா டீச்சர்?”என்று கேட்டாள். “போ” என்று சொல்லிச் சிரித்தார் மலை.
சரியாக மணி 7:00 ஆகியிருந்தது. எல்லோரும் தயாராகி மேடை அருகே காத்திருந்தனர். சற்றே கனமான ஒரு மழைத்துளி அஞ்சலியின் கன்னத்தில் ‘சொத்’ என்று விழுந்தது. சில நிமிடங்களில் மழை சோவென்று கொட்டித் தீர்க்க ஆரம்பித்தது.
“ஏய், என்னடி இப்பப் போய் மழை பேஞ்சா நம்ம டான்ஸ் கேன்சல் ஆகிடும் தானே?” என்று கேட்டாள். அஞ்சலியின் குரலில் அப்படி ஒரு சோகம் இழையோடியது.
“ஏய், அதெல்லாம் இல்ல, நாம இன்னைக்கு ஆடுறோம், பட்டையைக் கிளப்புறோம்“ என்றாள் ரேவதி.
“இல்லடி, அப்பாவ வேற வரச் சொன்னேன். பாவம்டி அவரு, மழை வந்தா நனஞ்சிடுவாரு. அந்த மூணு சக்கர வண்டியை வேற அழுத்திக்கிட்டு வரணும்.” என்றாள். இன்னும் கவலை சேர்ந்து கொண்டது அஞ்சலிக்கு.
சற்று நேரத்தில் அந்த மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் கவி ராம் மற்றும் அவர்கள் தினமும் மதிய உணவு இடைவேளையில் வாசிக்கும் சிறார் கதைகளை எழுதிய எழுத்தாளர் உமா செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்ற ஏற்கனவே மேடைக்கு வந்து விட்டனர்.
மணி 7:30 ஆகியிருந்தது. இறுதி நாள் என்பதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புத்தகக் காட்சிக்கு ஒத்துழைத்த, உறுதுணையாய் நின்ற அனைவருக்கும் நினைவுப் பரிசை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
“ஏய், உங்க அப்பா வந்துட்டாருடி. ஆனா தொப்பலாக நனஞ்சிட்டாருப் போலடீ” என்றாள் ரேவதி. அஞ்சலிக்கு கண்கள் சற்றே கலங்கிவிட்டன.
“ஏய், ஒன்னும் இல்லடி, அடுத்து நாம தான். முடிஞ்சதும் போய் அப்பாவ பாப்போம், சரியா?” என்று அவளைச் சமாதானப்படுத்தினாள் ரேவதி.
இது அஞ்சலிக்கு நடனத்தில் முதல் மேடை. பாடல் ஒலிக்க ஆரம்பித்து, தங்கள் நடனத்தை ஆரம்பித்திருந்தது அஞ்சலியின் குழு. வலது முன்புறத்தில் ஆடிக்கொண்டிருந்த அஞ்சலி தடுமாறிக் கீழே விழுந்துவிட்டாள். பெரும்பான்மையான பார்வையாளர்கள் சிரித்துவிட, பாடல் நிறுத்தப்பட்டது. மேடையின் ஓரத்திற்குத் தூக்கிவரப்பட்டாள் அஞ்சலி. அவமானத்தில் கண்ணீர் மல்க அப்பாவைத் தேட ஆரம்பித்தாள். பிரபாகர் ஏதும் செய்வதறியாது கைகளைப் பிசைந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். அஞ்சலிக்கோ மேடையில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியவில்லையே என்ற கவலை. அதை எண்ணி குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தாள்.
உடனடியாக எழுந்த சிறப்புரையாளர் உமா செல்வன் “அன்பான பெற்றோர்களே, வாசிப்பாளர்களே! நம்ம பிள்ளைகளுக்குத் தோல்வியையும், வீழ்ச்சிகளையும் பழக்கணும். விழுந்தா என்ன? திரும்ப நிக்கணும். அதத் தான் நாம கத்துக் கொடுக்கணுமே தவிர. அது அவமானமல்ல. நீங்க எல்லாம் சேர்ந்து கைதட்டி எந்திரின்னு சொல்லி இருந்தீங்கன்னா செமையா இருந்திருக்கும். ஆனா???…
“இங்க மாற்றுத்திறனாளிகளும், உடலில் சிறு குறைபாடுகள் இருப்பவர்களும் சாதாரண மனிதர்கள் அனுபவிக்கிற, பெறுகிற எல்லா அனுபவங்களையும், வாய்ப்புகளையும் பெறணும். இதை மனசுல வச்சு உங்க மாவட்டப் பொறுப்பாளர்கள் கண்ணும் கருத்துமா இந்தப் புத்தகக் காட்சியை மாற்றத்திறனாளிகள் அவங்க வாகனத்தோட உள்ளே வந்து பார்வையிட முடியிற மாதிரி ஏற்பாடுகள் பண்ணியிருக்காங்க. அதப் பார்த்து, நான் இங்க வந்தப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன் முதல்ல. ஆனா நீங்க என்னடான்னா??….
“சரி, இப்ப நான் கூப்பிடுறேன்,’’ முன்னாடி வாம்மா!’’
“மறுபடியும் பாட்டைப் போடுங்க. இந்தக் குழந்தை அவ குழுவோட மறுபடியும் ஆடுவா” என்றார். அஞ்சலியின் நடனக் குழுத் தோழிகள் அவளிடம் சென்று அவளை மேடையின் நடுவே அழைத்து வந்தனர். மீண்டும் விட்ட இடத்தில் இருந்து பாடல் துவங்கியது.
“ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது?” என்று பாடல் வரிகள் காற்றிலும், பிரபாகரின் கண்ணீர் கண்களிலும் கசிய ஆரம்பித்திருந்தன.
அதே சமயம் அரங்கத்திலிருந்து கைதட்டலும், ஆரவாரமும் மேற் கூரையைத் தாண்ட ஆரம்பித்திருந்தது.