சூழல் காப்போம்-9
ஒவ்வொரு தாள் கிழிக்கப்படும்பொதும் அதனுடன் மரத்தின் ஒரு பகுதி அழிக்கப்படுகிறது என்பது நம் நினைவில் இருக்க வேண்டும். அதனால் ஒவ்வொரு தாளையும் அலட்சியமாகப் பயன்படுத்தாமல், தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும்.
தாள் பயன்படுத்தும் நாம் சூழல் காக்க என்ன செய்ய வேண்டும்?
ஒன்றும் கடினமில்லை. பின்வருவனவற்றைப் பின்பற்றினால் போதும்.
1. காகிதத்துக்கும் உண்டு இரண்டு பக்கம்!
எந்தவொரு தாளுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. நமது வழக்கமான பள்ளிக் குறிப்பேடுகளில் இடம், வலம் இரு பக்கமும் எழுதும் பழக்கம் நமக்கு உண்டு. ஆனால் நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் மேல், கீழாகப் புரட்டும் குறிப்பேடுகளில் அப்படியான வசதி இருப்பதில்லை. எனவே அதன் ஒரு பக்கம் மட்டுமே பயன்படுத்துகிறோம். அதே போல செய்முறை ஏடுகள் (Practical note) என்பவற்றில், ஒரு பக்கத்தை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம்.
என்ன செய்யலாம்?
மதிப்பெண்ணுக்காக சமர்ப்பிக்கப்படும் நோட்டுகளை அப்படித்தான் செய்ய முடியும் என்பதையும் ஒப்புக் கொள்ளலாம். அவ்வாறு முடிந்து மீண்டும் உங்களுக்குத் திருப்பித் தரப்பட்டபின் இனி அவை மதிப்பெண்ணுக்கு உரியவையல்ல என்று முடிவெடுத்த பின், அந்தப் பாடம் தொடர்பாக எழுதிப் பார்ப்பதற்குக் கூட அந்த ஏட்டைப் பயன்படுத்தலாம். அல்லது அந்த ஆண்டு படிப்பு முடிந்ததும், அந்த நோட்டை அப்படியே தலைகீழாகத் திருப்பினால், எழுதுதற்குச் சிரமமான இடப்பக்கத்தை விட்டுவிட்டு, வலப் பக்கத்தில் உங்களுக்குக் காலி இடம் இருக்கும். அவற்றை படிக்க, எழுத, கணக்குப் போட்டுப் பார்க்க பயன்படுத்தலாம்.
2. நல்ல பக்கங்களை வீணாக்கலாமா?
மாணவர்களாகிய நாம் ஒவ்வொரு பாடத்தையும் எழுத என்று தனித் தனியாக எண்ணற்ற குறிப்பேடுகள் (Note) வைத்துள்ளோம். ஒவ்வோராண்டும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்தியிருப்போம் என்று சொல்லமுடியாது. அவற்றில் குறைந்தது கால்பங்கு பக்கங்களாவது காலியாக இருக்கும். அவற்றை வழக்கமாக மூட்டை கட்டி, அப்படியே எடைக்குப் போட்டு பேரீச்சம் பழம் வாங்கித் தின்று விடுவார்கள். இப்படி நல்ல தாள்களை வீணாக்கலாமா?
என்ன செய்யலாம்?
அப்படி எஞ்சியுள்ள தாள்களையெல்லாம் ஒன்று சேர்த்து, பைண்டிங் செய்தால் அவற்றை பாடங்கள் எழுதிப் பார்க்க Rough note ஆகவும், தனிப்பயிற்சிக்குப் பயன்படும் ஏடாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. வெளியூருக்கு அஞ்சல்கள்
அனுப்பும்போது புதிய கவர்களைத் தேடிக் கொண்டிருப்போம். அவை ஏன் புதியதாகவே இருக்க வேண்டும்?
என்ன செய்யலாம்?
நமக்கு வந்த தேவையற்ற அஞ்சல் உறைகளை (Cover) அப்படியே பிரித்து, திருப்பி ஒட்டினால் புதிய அஞ்சல் உறை தயார்! கடிதம் அனுப்புவது கிழியாமல் போய்ச் சேரத்தானே அஞ்சல் உறை, அதில் முகவரி எழுதுவதற்கு நல்ல வண்ணம் இடமிருந்தால் போதுமானது தானே!
இப்படி அனுப்பும் பெரியவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இது பணச் சிக்கனம் மட்டுமல்ல… சூழலுக்குத் தேவையானதும்கூட!
நாம் வீண் என்று அந்த உறைகளைக் கிழித்துத் தானே போடுவோம். ஆனால் அவற்றைப் பயன்படுத்தினால், இரட்டைப் பயன்பாடு ஆகாதா?
அது மட்டுமல்ல… முகவரி எழுதுவதில் ஏதேனும் அடித்தல் திருத்தல் இருந்தால் கூட, அதற்காகப் புதிய உறைகளைத் தேடிப் போக வேண்டுமா? அதன் மேலேயே ஒரு தாள் ஒட்டி பயன்படுத்த முடியாதா?