தெரியுமா?
கணினி நிரலிகளைக் கண்டுபிடித்த பெண்
ஆடா லவ்லேஸ்
கணினியைக் கண்டுபிடித்தவர் சார்லஸ் பாப்பேஜ் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், கணினி (Computer Programming) நிரலிகளைக் கண்டுபிடித்தவரைத் தெரியுமா? இன்று கணினியுலகில் ஏராளமான பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கணினி நிரலிகளைக் கண்டுபிடித்தவரும் ஒரு பெண்தான்.
அவரைப் பற்றித் தெரியாதவர்களுக்காக… 2009ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 15ஆம் தேதி ஆடா லவ்லேஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவியல், தொழில்நுட்பத்தில் பெண்கள் செய்துள்ள சாதனைகளை எடுத்துக்கூறி மறைக்கப்பட்ட உண்மைகளைச் சமூகத்திற்கு வெளிப்படுத்தும் தினம்தான் ஆடா லல்லேஸ் தினம் எனப்படுகிறது.
கணினியில் முதல் நிரலியை (Program) எழுதி 150 ஆண்டுகளுக்குமுன் சாதித்தவரே ஆடா லல்லேஸ்(Ada Lovelace). கணினியைக் கண்டுபிடித்த சார்லஸ் பாப்பேஜ், பணக்காரர்கள் கலந்து கொண்ட விருந்தில் ஒரு பெரிய பெட்டியினை டெமோ காண்பித்தார்.
அந்த விருந்தில் கலந்துகொண்டு பார்த்த ஆடாவுக்கு, அவர் தான் படித்த கணிதமும் தர்க்கமும் ஆர்வத்தைத் தூண்ட பாப்பேஜோடு நட்புக் கொண்டார். பாப்பேஜ் கண்டுபிடித்த அனலிடிக்கல் என்ஜின் உருவாக்கியதில் பெரும் பங்காற்றியுள்ளார் ஆடா.
1842ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அனலிடிக்கல் என்ஜின் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை பிரெஞ்சு மொழியில் வெளிவந்தது. அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் ஆடா. அனலிடிக்கல் என்ஜின் இயங்கும் விதம், அல்ஜீப்ராவின் சூத்திரங்களை அதனுள் பயன்படுத்தும் முறை, கணிதம் மட்டுமன்றி, செயல்பாடுகளை உருவாக்குவது பற்றியும் அடுத்தடுத்த விளக்கங்களைத் தெளிவான முறையில் எழுதி 1843ஆம் ஆண்டு வெளியிட்டார்.
சார்லஸ் பாப்பேஜ் சிந்திக்காத பல விளக்கங்களைத் தொகுத்துக் கொடுத்திருந்தார் ஆடா. பெர்னோலி எண்கள் என்னும் கணித சூத்திரத்தை பாப்பேஜ் உருவாக்கிய அனலிடிக்கல் என்ஜின் மூலம் எப்படிச் செய்வது என்பதை எழுதிக்காட்டியதே உலகின் முதல் கணினி நிரலி (Computer program) ஆகும்.
இந்தச் சாதனையை ஆடா தனது 28ஆவது வயதில் செய்துள்ளார். 1815 டிசம்பர் 10 அன்று பிறந்த ஆடா, நவம்பர் 27 1852இல் தனது 36 வயதிலேயே மறைந்துவிட்டார்.
நல்லாத்தான்யா யோசிக்கிறாங்க
குழந்தைகளைக் குளிப்பாட்டும் போது நம்ம பாட்டிமார்களும், அம்மாமார்களும் படாத பாடுபடுவார்கள். குழந்தையின் மூக்கினுள் தண்ணீர் சென்று மூச்சு முட்டிவிடக்கூடாது என்று தலையில் ஒரு கையை வைத்து குடை போல மறைத்துக் கொள்வார்கள்.
காலம் காலமாக இப்படித்தான் நம் குழந்தைகளைக் குளிப்பாட்டுகிறோம். ஆனால், இந்தக் குழந்தைக்கு ஒரு குடையைத் தலையில் சொருகி அழவிடாமல் செய்துவிட்டார்களே… (ஆனா… நம்ம பயபுள்ளைக தலையில தொப்பியை மாட்டவிடாம அடம் பண்ணுவாங்களே?)
இப்போது சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களிலும் இந்தத் தொப்பி வந்துடுச்சாம்.