வித்தகர் வள்ளியப்பா!
நவம்பர் 7 – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பிறந்த நாள்
அழகுத் தமிழில் ஆயிரமாய்
அறிவை உயர்த்தும் பாடலையே
குழந்தை களுக்காய் உருவாக்கிக்
குவித்த கவிஞர் வள்ளியப்பா!
சின்னஞ் சிறிய பாடல்களால்
சிந்தை தனையே வளர்த்திட்டார்!
கன்னல் போல அவர்பாடல்
கால மெல்லாம் இனித்திடுமே!
தினமும் வாழ்வில் காண்பதையே
தித்திப் பான தீந்தமிழில்
மனதை ஈர்க்கும் வகையினிலே
மழலை யர்க்காய்ப் பாடிட்டார்!
பழங்கள் பூக்கள் காய்கறிகள்
பறவைகள் விலங்குகள் யாவையுமே
அழகு மழலைத் தமிழினிலே
அன்றே பாட லாக்கிட்டார்!
நீதிக் கதைகள் கட்டுரைகள்
நேர்மை போற்றும் புதினங்கள்
மேதி னிக்குள் மழலையர்க்காய்
மென்மைத் தமிழில் செய்திட்டார்!
சிறுவர் நெஞ்சுள் எளிதாகச்
செந்த மிழ்தன் சிந்தனையை
விறுவி றுப்பாய் ஏற்றிட்ட
வித்த கர்தாம் வள்ளியப்பா!
– கே.வி.பத்மநாபன்,
சிங்காநல்லூர், கோவை