செய்து அசத்துவோம் – அனிமேஷன் புத்தகம்
தேவையான பொருள்கள்:
1. இங்க் பேனா.
2. குறைந்தது முப்பது பக்கங்களுக்குக் குறைவில்லாத ஒரு வெள்ளைத்தாள் நோட்டுப் புத்தகம்.
செய்முறை:
1. நோட்டுப் புத்தகத்தில் முதல் பக்க வலது ஓரத்தில் படம் 1இல் இருப்பது போல ஓர் ஓவியத்தை வரைந்து கொள்ளவும். வரைவதற்குச் சிரமமாக இருந்தால் படம் 4இல் உள்ளதுபோல எளிதான ஒரு கோட்டுச் சித்திரத்தை வரைந்துகொள்ளவும்.
2. உங்களது ஓவியம் பந்து விளையாடும் சிறுவனாகவோ, நடனமாடும் பொம்மையாகவோ அல்லது உங்களது கற்பனைக்கு ஏற்ற வகையில் இருக்கலாம்.
3. ஒவ்வொரு பக்கத்திலும் அதே ஓவியத்தை திரும்பத் திரும்ப வரையவும். ஆனால், சிறிது, சிறிதாக இடது பக்கத்துக்கு நகர்த்தி வரையவும். (படம் 2இல் உள்ளது போல)
4. குறைந்தது இருபது பக்கங்களுக்கு மேல் வரையவும். பிறகு புத்தகத்தை படம் 4இல் காட்டியுள்ளதுபோல இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு சிறிது விரைவாகத் திருப்பவும். இப்போது நீங்கள் வரைந்த ஓவியம் நகருவது தெரியும். எவ்வளவு விரைவாகத் திருப்புகிறீர்களோ அவ்வளவு விரைவாக அந்த ஓவியம் நகரும். இது பார்க்கப் பார்க்க ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமையும். பிறகென்ன? நீங்களும் அனிமேஷன் புத்தகங்களை உருவாக்கி விட்டீர்கள் என்று பொருள். வாழ்த்துகள்!