காரணமின்றி ஏற்காதீர்கள் – கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா?
பெற்றவர்கள், பெரியவர்கள் ஏன் சில ஆசிரியர்கள் கூட மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும் முன் கடவுளை வேண்டிக் கொண்டால் தேர்வு சிறப்பாக எழுதலாம் என்று கூறி அவ்வாறே மாணவர்களைச் செய்யவும் சொல்கின்றனர்.
படிக்காத மாணவன் கடவுளை வேண்டுவதால் அதிக மதிப்பெண்கள் பெறுவது இல்லை, நன்றாகப் படிக்கின்ற மாணவன் கடவுளை வேண்டிக் கொள்ளாததால் குறைவான மதிப்பெண் பெறுவதும் இல்லை.
எனவே, படிப்பைப் பொறுத்தே தேர்வு எழுதுகிறான். மதிப்பெண் பெறுகிறான் என்னும் போது இதில் கடவுளுக்கு என்ன வேலை?
தன்னை வணங்காதவனுக்கு உதவாது என்றால் அது கடவுளாகுமா? கடவுளே இல்லையென்று இப்போது கொரோனா வைரஸ் காட்டிவிட்டது. கடவுளுக்கு சக்தியில்லை; கொரோனாவுக்குப் பயந்து கடவுள் முகக்கவசம் மாட்டிக் கொள்கின்றது; கோயில்கள் மூடிக்கிடக்கின்றன என்னும் போது கடவுள் எல்லாம் வல்லது; எல்லா சக்தியும் உடையது என்பதெல்லாம் உண்மையல்ல; மூடநம்பிக்கை என்று தெளிவாக இப்போது வெளிவந்துவிட்டது. எனவே, பிஞ்சுகள் தங்கள் அறிவை, உழைப்பை நம்ப வேண்டும் மூடநம்பிக்கையை விலக்க வேண்டும்!
கடவுளுக்குத் தலைமுடியைத் தரவேண்டுமா?
தனக்கு நோய் தீர்ந்தால் தலைமுடியை கடவுளுக்குக் காணிக்கையாகத் தருகிறேன், தன் கோரிக்கை (வேண்டுதல்) நிறைவேறினால் தலைமுடியைத் தருகிறேன் என்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வேண்டிக் கொண்டு, அவ்வாறே கோயிலுக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கின்றனர்.
கடவுளும் முடியைக் காணிக்கையாக கேட்கிறதா? கடவுள் நோய் தீர்க்கிறதா? நம் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுகிறதா? இவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டும்.
கடவுள் என்பது கற்சிலை. அதை மனிதன்தான் கல்லிலிருந்து செதுக்கி உருவாக்குகிறான். அப்படி உருவான கல்லுக்கு எப்படிக் கேட்கும் சக்தியும், நம் வேண்டுதலை நிறைவேற்றும் சக்தியும் வரும்? கல்-கல் தானே?
கடவுளையே கடத்திக் கொண்டு போகிறார்கள். கடவுளுக்கு சக்தியிருந்தால் அது காப்பாற்றிக் கொள்ள வேண்டியது தானே? ஏன் முடியவில்லை?
எனவே, நோய் வந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டுமே தவிர, கோயிலுக்குச் செல்லக்கூடாது முடியை வளர்ப்பது கோயிலுக்குச் சென்று மொட்டை போடுவது அறியாமை மற்றும் உடல் நலக்கேடு. எனவே, அறிவுக்கும், அறிவியலுக்கும் ஒவ்வாதவற்றைச் செய்யக்கூடாது!