காரணமின்றி ஏற்காதீர்கள்: கைராசி என்பது உண்மையா?
சிகரம்
ஒரு காரியத்தைத் தொடங்கி வைப்பவர் கைராசியைப் பொறுத்து அக்காரியம் நிறைவேறுவதும், நிறைவேறாமல் போவதும் நிகழும் என்ற நம்புகின்றனர். அதனால், கைராசிக்காரரைக் கொண்டு அக்காரியத்தைத் தொடங்குவது வழக்கத்தில் உள்ளது.
கடைக்காரர் முதல் விற்பனையைக் கைராசிக்காரரைக் கொண்டு தொடங்குவார். கைராசிக்காரர் முதல் விற்பனையைத் தொடங்கினால் அன்றைக்கு விற்பனை அதிகம் நடக்கும் என்று நம்புகின்றனர்.
கட்டடத்திற்கும் முதல் கல் எடுத்து வைத்தல், செடி நடுதல், விதை விதைத்தல் இப்படி பல செயல்களையும் கைராசிக்காரர் முதலில் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அது சிறப்பாக அமையும் என்று நம்புகின்றனர்.
கைராசி என்பது உண்மையா? என்றால் நிச்சயம் இல்லை. நடக்கின்ற செயலுக்கும், அதன் வெற்றி, தோல்விக்கும் தொடங்கி வைக்கின்ற கைராசி காரணம் அல்ல.
கைராசி என்று எதுவும் இல்லை. தினமும் கைராசிக்காரர் விற்பனையைத் தொடங்கிவைத்தாலும், அதில் பல நாள்கள் விற்பனைச் சரியாக நடக்காமல் போவதை நாம் அறியலாம்.
அதேபோல் சிலர் தொடங்கினால் அது துலங்காது என்பர். அவர் கைராசி இல்லாதவர் என்பர். அப்படி கைராசி இல்லாதவர் பல செயல்களைத் தொடங்கினாலும், அவர் தொடங்கிய பல செயல்கள் வெற்றியாயும், சிறப்பாகவும் அமைவதை அறியலாம்.
எனவே, தொடங்குகின்றவர் கைராசி ஒரு செயலின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பதாய் நம்புவது அறியாமை. அதில் உண்மை சிறிதும் இல்லை.
செய்கின்றவர் திறமையைப் பொறுத்து அச் செயலின் சிறப்பு, வெற்றி, தோல்வி அமையுமே தவிர, சிலரது கைராசியைப் பொறுத்து எதுவும் நடக்காது. எனவே, கைராசி என்பது மூடநம்பிக்கையாகும்.
தடுக்கினால், தவறினால் கேடு வருமா?
ஒரு செயலைச் செய்யச் செல்லும்போது கால் தடுக்கினால் அக்காரியம் நிறைவேறாது என்றும், ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது பொருள் தவறி விழுந்தால் அச்செயல் நடக்காது என்றும் நம்புகின்றனர்.
ஒரு செயல் நடக்குமா? நடக்காதா? என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் சகுனமாக இவற்றை நம்புகின்றனர். இவை உண்மையா?’ என்றால் இல்லை. இவை மூடநம்பிக்கைகளே!
தடுக்குதல், தவறுதல் என்பவை இயல்பாய் நிகழ்பவை. இப்படி இயல்பால் நிகழ்பவற்றை அப்போது செய்யப்படும் செயல்களோடு தொடர்புபடுத்தி, அவற்றின் வெற்றி தோல்வியை இவை முன்கூட்டியே அறிவிக்கின்றன என்று நம்புவது அறியாமை.
தடுக்கும் போதும், தவறும்போதும் நடக்கும் பல செயல்கள் நன்றாக வெற்றிகரமாக நடந்து முடிவதைப் பலமுறை சோதித்துப் பார்த்தால் தெரியும்.
தேர்வு எழுதச் செல்லும் மாணவன் காலிலோ, தலையிலோ இடித்துக் கொண்டால் அத்தேர்வு நல்ல முறையில் அவனால் எழுத முடியாமல் போகும் என்று நம்புகின்றனர். இதில் சிறிதுகூட உண்மையில்லை.
நன்றாகப் படித்துள்ள மாணவனுக்கு எது தடுத்தாலும், எது தவறினாலும் அவன் சிறப்பாகவே எழுதி முடிப்பான். எனவே, தேர்வு எழுதுவதற்கும் தடுத்தல், தவறுதல் நிகழ்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
விழுந்து எழுந்துதான் குழந்தை நடக்கப்-பழகுகிறது. விழுந்து எழாமல் சைக்கிள் ஓட்டப் பழகினோர் எத்தனை பேர்? இவற்றைப் புரிந்து கொண்டாலே இந்த மூடநம்பிக்கை ஒழிந்து போகும்.
இராசி, தடங்கல், தவறுதல் போன்றவற்றை, பல செயல்களில் சோதித்துப் பார்த்தால் அவற்றில் சிறதும் உண்மையில்லை; அவை மூடநம்பிக்கைகளே என்பது தெளிவாய் விளங்கும்.