பறக்கும் தாவரம் கிளியக்கா!
பச்சை பச்சைக் கிளியக்கா
பவள மூக்குக் கிளியக்கா!
இச்சை மொழியாம் தமிழாலே
இனிக்கப் பேசும் கிளியக்கா!
பழங்கள் தொங்கும் கிளைகளிலே
பக்குவ மாக நீதொங்கி
அலகால் கொறித்துத் தின்கின்ற
அழகே அழகு! கிளியக்கா!
விஞ்சிடும் புகழை உனக்களிக்க
விழைந்தார் புலவர் பலரக்கா!
கொஞ்சும் தமிழார் இலக்கியத்தில்
கொண்டார் தூதாய் உனையக்கா!
‘அஞ்சுகம்’ என்றே அழகாக
அழைப்பார் தமிழில் கிளியக்கா!
எஞ்சிய பறவை இனமக்கா
எந்தம் ‘பிள்ளை’ நீயக்கா!
தத்தித் தத்தி நடக்குமுனைத்
‘தத்தை’ என்பார் கிளியக்கா!
கத்திக் ‘கீகீ’ எனுமுன்னைக்
‘கிள்ளை’ என்பார் கிளியக்கா!
மரங்களின் பொந்துகள் இடுக்குகள்தாம்
இருப்பிடம் உனக்காய் ஆனதக்கா!
தரத்தினில் முதலிடம் உனக்கக்கா
தருவார் ஆர்வலர் கிளியக்கா!
இலவங் காயும் பழுக்குமென்றே
எண்ணிநீ காத்திட வேண்டாமே!
பலவாய்ப் பழமரம் இருக்குதக்கா
புசித்திட அங்கே போ அக்கா!
நிறத்தில் ‘பச்சையம்’ கொண்டாலும்
நிலத்தில் முளைக்கா உனையக்கா
‘பறக்கும் தாவரம்’ எனக் கூறிப்
பெருமை கொள்வோம் கிளியக்கா!
– இளசைக் கோவன்