சாதனைப் பிஞ்சு: இரண்டு வயதில் மூன்று விருதுகள்
மகிழ்
நமது கல்விமுறை என்பதே ஒரு வகையில், படித்த பாடங்களை நினைவு அடுக்கில் வைத்து ஒப்புவிக்கும் அமைப்பாகும். ஒவ்வொரு குழந்தையும், மாணவரும் படிக்கும் செய்திகளை தங்கள் மூளையின் ஒரு பகுதியில் சேமித்து வைக்கும் பழக்கம் சிறு வயது முதலே ஏற்பட்டுவிடுகிறது. திறமையான சாதனையாளர்கள் பலர் அவரவர் துறையில் சாதிக்க நினைவாற்றல் பயன்பட்டு இருக்கிறது.
மாவீரர் அலெக்சாண்டர் அவருடைய படையிலிருந்த 30,000 சிப்பாய்களையும் பெயர் சொல்லி அழைக்குமளவுக்கு நினைவில் வைத்திருப்பார். இசைக்கலைஞர் மொசார்ட் ஒருமுறை ஒரு பாடலைக் கேட்டால் அதை மறுபடியும் இசைக்குமளவுக்குத் திறன் படைத்தவர். இவை வரலாற்றுச் செய்திகள்.
அதுபோல நம் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு வயது பெரியார் பிஞ்சு ஒருவர் நினைவுத் திறனில் அசத்தி சாதனை படைத்துள்ளார்.
நினைவாற்றலைக் கொண்டு சாதனை செய்து அசத்தியுள்ளார் ஒரு பெரியார் பிஞ்சு.
உரத்தநாடு கக்கரை கோ.இராமமூர்த்தி அவர்களின் மகள் சிங்கப்பூர் இரா.கவிமொழி – வசந்தகுமார் இணையரின் மகன் வ.கவின் முப்பெரும் சாதனைகள் புரிந்து அசத்தியுள்ளார்.
41 நாடுகள்
25 வகை பழங்கள்
20 வகை காய்கறிகள்
25 வகை பறவைகள்
20 காட்டு வகை விலங்கினம்
17 வகை வீட்டுப் பிராணிகள்
21 வகையான வாகனங்கள்
22 விதமான பணியாளர்கள்
20 வகையான மின் பொருள்கள்
25 தேசியத் தலைவர்கள்
26 மனித உடற் பாகங்கள்
16 வகை வீட்டு உபயோகப் பொருள்கள்
இன்னும் பல….
படங்களைப் பார்த்த உடனே அவற்றை அடையாளப்படுத்தியதால் தனது ஒன்றே முக்கால் வயதில் “இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” புத்தகத்திலும். “கலாம் உலக சாதனையாளர்” புத்தகத்திலும், இடம் பெற்றுள்ள கவினுக்கு வயது இப்போது 2 ஆண்டு 2 மாதங்கள்.
197 நாடுகளின் தேசியக் கொடிகளை அடையாளப்படுத்தி “ஜெட்லி புக் ரெக்கார்ட்ஸில்” இப்போது மூன்றாவது விருதினைப் பெற்றுள்ளார் இந்தப் பெரியார் பிஞ்சு!