விண்ணியல் : நிலாவிலே விவசாயம் செய்யலாமா!
கவிஞர்கள் கவிதை எழுத கற்பனை ஓவியமாகவும், அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டக் காட்டும் ஓர் அழகு உருவமாகவும், இரவில் தன் ஒளி தரும் விளக்காகவும் இருந்து வரும் நிலாவில் நிலம் வாங்கலாமா? என்று கேட்பது வியப்பாகவும், வினோதமாகவும் இருக்கின்றதல்லவா…! அப்படி என்ன நிகழ்ந்துள்ளது? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
‘சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா!’ என்ற பாடல் வரிகளைக் கேட்டு ரசித்திருப்போம். அவர் நிலவைத் தொட்டு விட்டு மட்டும்தான் வந்தாரா என்றால் இல்லை.
கற்பனையிலேயே நிலவைப் பற்றிக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த கவிஞர்களுக்கு மத்தியில் முதன்முதலில் நிலவில் கால் தடம் பதித்தவர்கள் அமெரிக்கர்கள். பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் 1969 ஜூலை 16ஆம் நாள் நிலவை நோக்கிப் பறந்தது நாசாவின் அப்போலோ – 11 விண்கலம். 4 நாள்கள் பயணத்திற்குப் பின், ஜூலை 20ஆம் நாள் நிலவின் அருகே நிறுத்தப்பட்டது அந்த விண்கலம்.
அடுத்த நாள், அதாவது 1969 ஜூலை 21ஆம் தேதி அதிகாலை 3.00 மணி அளவில் தூசு போன்ற மணல் பரப்பில், மனித இனம் சார்பில் முதன்முதலாக நிலவில் கால் பதித்தார் நீல் ஆம்ஸ்ட்ராங். அடுத்ததாக நிலவின் நிலப்பரப்பில் கால் வைத்தார் ஆல்ட்ரின்.
பல்வேறு ஆய்வுக் கருவிகளை நிலவில் பொருத்திய அவர்கள், அங்கே சிதறிக் கிடந்த பாறைகளையும், சிறு கற்களையும், மண்ணையும் சேகரித்துக் கொண்டனர். அதன் மொத்த எடை 382 கிலோகிராம் என்று கூறப்படுகிறது.
இப்படியாக புது மகிழ்ச்சியில் இரண்டரை மணி நேரம் நிலவின் நிலப்பரப்பில், நேரத்தைச் செலவிட்டனர். இருவராலும் புதிய சாதனை படைக்கப்பட்டதை, பூமியில் இருந்தவாறு பூரிப்புடன் பார்த்து ரசித்தது நாசா. அடுத்த சில நிமிடங்களில் பூமிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டது. அடுத்த 4 நாள்கள் பயணம் செய்து பூமியை வந்தடைந்தனர்.
இவ்வாறாக அப்போது கொண்டு வரப்பட்ட மண்ணில்தான், செடிகளை வளர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். இன்றைய விஞ்ஞானிகள். ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா?
ஆம். அப்பல்லோ 11, 12 மற்றும் 17 போன்ற விண்கலங்களை அனுப்பியபோது சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளைக் கொண்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 53 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர்_ நாசா விஞ்ஞானிகளும், அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும். இந்த ஆய்வில் அரபிடோப்சிஸ் என்னும் தாவர விதையை விதைத்துள்ளனர். இது கடுகு வகையைச் சேர்ந்த செடி எனத் தெரிகிறது. ஒரு செடிக்கு ஒரு கிராம்_ அதாவது ஒரு ஸ்பூன் அளவு மட்டுமே நிலவின் மண்ணைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதில் விதையை விதைத்து, தண்ணீர் தெளித்துப் பாதுகாத்துள்ளனர் விஞ்ஞானிகள். இரண்டு நாள்களில் அந்த மண்ணில் விதைக்கப்பட்ட விதைகள் செடிகளாக முளைத்துள்ளன.
பூமியில் வளரும் மற்ற தாவரங்கள் போல இந்த தாவரத்திலும் விதைகள் வெடித்து வெளியே வந்தாலும் வேர்களின் வளர்ச்சி குறைவாக இருந்துள்ளது. இதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்ற முயற்சியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் விரைவில் இதற்குத் தீர்வு காண்போம் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
நிலவின் மண்ணில் சத்துகள் குறைவாகவே இருக்கின்றன என்பதால் செடி செழித்து வளரத் தேவையான முயற்சிகளைக் கவனமுடன் எடுத்து வருகின்றார்களாம். இது நல்ல பலனைத் தந்துள்ளது எனவும் அவர்கள் கூறுகின்றார்கள்.
இப்போது புரிந்துவிட்டதா? நிலாவில் நிலம் வாங்க ஏன் உங்களைத் தயார்படுத்தினேன் என்று?
இனி வரும் காலங்களில் நிலவை ஆராய்ச்சி செய்யச் செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டாலும் அங்கேயே அவர்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்ள இந்த ஆய்வின் முடிவுகள் உதவும் எனவும், மேலும் மற்ற கோள்களிலும் இது போன்ற ஆராய்ச்சியை முன்னெடுக்க இந்த முயற்சி உதவிகரமாக இருக்கும் என்றும் உறுதியாகக் கூறலாம். இவற்றிற்கெல்லாம் மேலாகப் பூமியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் அதற்கான மாற்று வழிகளைக் கட்டமைத்துக் கொள்ள இந்த ஆராயச்சியின் முடிவுகள் நமக்குப் பெருமளவு துணை புரியும்.<