கோமாளி மாமா-34 : வானம் வசப்படும்
மு.கலைவாணன்
கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்க மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் தோட்டத்துக்குச் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தனர். கோமாளி மாமாவின் வருகைக்காகக் காத்திருந்தனர்.
செல்வம் வானத்தில் கூட்டமாகப் பறந்து செல்லும் பறவைகளைக் காட்டி, “மொத்தம் எத்தனை பறவை போகுதுன்னு சொல்ல முடியுமா?’’ என்று மற்ற இருவரையும் கேட்டான்.
உடனே… மாணிக்கமும், மல்லிகாவும் வேகவேகமாக எண்ணத் தொடங்கினார்கள். “மொத்தம் 16” என்றான் மாணிக்கம். “இல்லை… இல்லை மொத்தம் 18 பறவைகள்” என்றாள் மல்லிகா.
அந்த நேரம் கோமாளி மாமா அங்கே வந்தார். “என்ன, எல்லாரும் வானத்தைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க’’ என்று கேட்டார்.
பறந்து போகும் பறவைகள் எத்தனை என்று எண்ணிக் கணக்கிடுவதாகச் சொன்னான் செல்வம்.
“இப்படித்தான் வானத்தின் உயரத்தில் பறக்கும் பறவைகளைப் பார்த்து வியந்த ரைட் சகோதரர்கள்தான் விமானத்தைக் கண்டுபிடிச்சாங்க. அதுதான் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்புகளிலே ஒன்று’’ என்றார் கோமாளி மாமா.
“அப்ப வேற என்னென்ன கண்டுபிடிச்சாங்க… மாமா?’’ என்றாள் மல்லிகா.
“இருபதாம் நூற்றாண்டுலதான் அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தன. அதனால தான் இருபதாம் நூற்றாண்டை ‘அறிவியல் நூற்றாண்டு’ அப்படின்னு வரலாறு சொல்லுது.
ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகள் இருந்தாலும் இந்த உலகத்தையே சுருக்கி நம்ம கைக்குள்ள கொண்டு வந்த கண்டுபிடிப்புகள் ரெண்டு. ஒன்று, அலெக்சாண்டர் கிரகாம்பெல் கண்டுபிடிச்ச தொலைபேசி; இன்னொன்று, நான் சொன்ன விமானம்.
நீங்க இப்ப வானத்திலே பறக்கிற பறவையைப் பார்த்த மாதிரி… பறவைகள் பறக்கிற அழகைப் பார்த்து நாமும் அதுபோலப் பறந்தா நல்லாயிருக்குமே… ஏன் மனிதனால் பறக்க முடியாதுன்னு கேள்வி கேட்டு பல ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி செய்து ரைட் சகோதரர்கள் கண்டுபிடிச்சதுதான் விமானம்.
வாங்க! நாம அந்த மரத்தடியில உக்காருவோம்” என்றார் கோமாளி.
“மாமா! மாமா! ரைட் சகோதரர்கள்னு சொல்றீங்களே, அவங்க யாரு?’’ என்றாள் மல்லிகா.
“சொல்றேன்! சொல்றேன்!’’ என்றபடி மரத்தடியில் இருந்த கல்மீது உட்கார்ந்தார் கோமாளி. அவரைச் சுற்றி மூன்று பேரும் உட்கார்ந்தனர்.
“அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் மெல்வில் என்னும் ஊரில் 1867ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் நாள் பிறந்தார் வில்பர் ரைட், அவர் பிறந்து நாலு ஆண்டுக்குப் பிறகு 1871லே ஆகஸ்ட் 9ஆம் நாள் பிறந்தார் இளையவர் ஆர்வில் ரைட்
இவங்க அப்பா ஒரு பாதிரியார். பேரு மில்டன் ரைட். ரொம்ப ஏழ்மையான குடும்பம். அதனால ரைட் சகோதரர்களாலே உயர்நிலைப்பள்ளி படிப்பைக் கூட முடிக்க முடியல.
ஒருமுறை அவங்க அப்பா வெளி ஊருக்குப் போயிட்டு வந்தப்ப ஒரு ஹெலிகாப்டர் பொம்மை ஒன்னு வாங்கிட்டு வந்து கொடுத்தாரு. மூங்கில் தக்கை, காகிதம், அட்டை இதெல்லாம் வச்சி செய்த அந்தப் பொம்மை, வீட்டு மேற்கூரை வரைக்கும் பறந்தது. பட்டம் விடுற ஆர்வம் உள்ள ரைட் சகோதரர்களுக்கு இந்த ஹெலிகாப்டர் சின்னதா இருக்கு. இதுபோல பெருசா செஞ்சா வெளியில இன்னும் உயரத்தில பறக்கவிடலாமேன்னு தோணுச்சு. பல தடவை முயற்சி செய்து பாத்து தோத்துட்டாங்க.
ஆனா… என்னைக்காவது ஒரு நாள் நாமும் வானத்திலே பறப்போம்ங்கிற நம்பிக்கையை மட்டும் கைவிடல.பிழைப்புக்காக அச்சு நிறுவனம் நடத்துனாங்க. செய்தித்தாள் அச்சிட்டு வெளியிட்டாங்க. அதுலேயும் நஷ்டம். அந்த நேரம் மிதிவண்டி அறிமுகமான நேரம். அதனால மிதிவண்டி பழுதுபார்க்கும் கடை… அதன்பிறகு சைக்கிள் வியாபாரத்திலேயும் ஈடுபட்டாங்க.அப்போது ஜெர்மானியரான ஓட்டோ லிலியன்தால் (Otto Lilienthal) என்பவர் கிளைடர் என்னும் கருவியைக் கண்டுபிடித்து இயந்திரம் எதுவுமில்லாமல் காற்றின் உதவியால் வானத்தில் பறக்க முயற்சி செய்திருக்காரு அப்படிங்கிற செய்தியைக் கேள்விப்படுறாங்க.நமக்கு முன்பே பல பேர் இப்படி பறக்கும் முயற்சி செய்யிறாங்க என்ற தகவல் ரைட் சகோதரர்களுக்குக் கிடைக்குது. பறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை உண்டாகுது. மேலும் மேலும் அதுபற்றிய தகவல்களைத் தேடுறாங்க. ஓட்டோ லிலியன்தால் பறக்கும் சோதனையில் ஈடுபட்டபோது விபத்திலே இறந்து போயிட்டாருங்கிற செய்தி கிடைக்குது.அதுக்காகச் சோர்ந்து போகாம இதுக்குமுன்னே வானத்தில் பறக்க முயற்சி செய்த தகவல்களைச் சேகரிச்சு வேற வேற கோணத்தில ஆராய்ச்சி செய்தாங்க.1900ஆம் ஆண்டில் முதல் கிளைடரை உருவாக்கி வட கேரனொய்வில் உள்ள கிட்டிகாக் என்னும் இடத்தில் பறக்க முயற்சி செய்து பார்த்தாங்க. ஆனா எதிர்பார்த்த வெற்றி கிடைக்கல.அடுத்த நான்கு ஆண்டுகள் தொடர்ந்து தங்கள் வடிவமைப்பில மாற்றங்களைச் செய்து சோதிச்சுக்கிட்டே இருந்தாங்க. ஒவ்வொரு முறையும் ஒரு சின்ன முன்னேற்றம் ஏற்பட்டுது.1903ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி ஃப்ளையர் என்று அவர்கள் பெயர் வைத்த விமானம் தயாராச்சு.அதை யார் ஓட்டுறதுன்னு நாணயத்தைச் சுண்டிப் போட்டுப் பார்த்ததிலே வில்பருக்கு அந்த வாய்ப்பு வந்தது. பெருத்த படபடப்போட விமானத்தில் ஏறி குப்புறப்படுத்துக் கொண்டே விமானத்தைக் கிளப்ப முயற்சி செய்தார் வில்பர்.
குப்புறப் படுத்துக்கிட்டு ஓட்டுற மாதிரிதான் அப்ப அதை தயார் செய்திருந்தாங்க. ஆனால் ஏதோ இயந்திரக் கோளாறு காரணமா விமானம் நகரவே இல்லை.
அப்பவும் அவங்க முயற்சியைக் கை விடலே. அடுத்த மூன்று நாள்கள் சிந்திச்சு மேலும் சில மாற்றங்கள் செய்தாங்க.
டிசம்பர் 17 ஆம் நாள் மறுபடியும் முயற்சி செய்தாங்க. இந்த முறை நாணயத்தைச் சுண்டிப் பார்த்ததில் ஆர்விலுக்கு வாய்ப்பு வந்தது.
விமானத்தில் குப்புறப் படுத்துக்கொண்டு அமெரிக்க நேரப்படி காலை 10:35 மணிக்கு விமானத்தைக் கிளப்பினார் ஆர்வில்.
ஆடி, குலுங்கி, கனைத்து, புகையை வெளியிட்டபடி மெதுவாக மேலே எழும்பியது.
அந்தரத்தில் அப்படியும் இப்படியுமாக ஆடி அசைந்து சரியாக 12 வினாடிகள்தான் வானத்தில் பறந்தது. அதன்பின் 37 மீட்டருக்கு அப்பால் போய் பத்திரமாகத் தரை இறங்கியது. அந்த 12 வினாடிகள்தான் ஆகாயப் போக்குவரத்துக்கு அடிகோலிய வினாடிகள்.
ரைட் சகோதரர்கள் சிந்திய வியர்வைக்குக் கிடைத்த பலன் அது! விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி அது!
அதே நாளில் மேலும் மூன்று முறை ரைட் சகோதரர்கள் மாறி மாறிப் பறந்து சோதனைகள் செய்தனர். நான்காவது முறை வில்பர் 57 வினாடிகள் அந்தரத்தில் பறந்தார்.
அதற்கு அடுத்த ஆண்டே நூறு அடி உயரம் சென்று பன்னிரண்டு மைல்கள் பறந்து சாதனை செய்தனர் ரைட் சகோதரர்கள்.
தொடர்ந்து பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் செய்து 1908 ஆம் ஆண்டு 57 நிமிடங்கள் வானில் வட்டமிட்டு புதிய சாதனை படைத்தார் ஆர்வில்.
அடுத்த சோதனையின் போது ஒரு பயணியைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். ஆனால் எதிர்பாராத விதமாக விமானத்தில் ஏற்பட்ட திடீர்க் கோளாறு காரணமாக அது பூமியில் விழுந்து நொறுங்கியது.
உடன் சென்ற பயணி உயிரிழந்தார். ஆர்வில் தப்பிப் பிழைத்தார்.
வான்வழிப் பயணத்துக்கு வழிவகுத்த வில்பர் ரைட் 1912 மே 10ஆம் நாளும், ஆர்வில் ரைட் 1948 ஜனவரி 30ஆம் நாளும் இயற்கை எய்தினர்.
இன்று உலகின் எந்த மூலை முடுக்குக்கும் நினைத்தவுடன் சென்றுவர முடிவதற்குக் காரணம் ரைட் சகோதரர்கள் அன்று செய்த விடா முயற்சியே ஆகும்.
அவர்கள் முயற்சி செய்தபோது இந்த உலகம், “முட்டாள்கள் இவர்கள், வானத்தில் பறக்கப் போகிறார்களாம்…’ என்று கேலி பேசியது.
“இந்த முயற்சி மதத்திற்கு எதிரானது’ என்று கிண்டல் செய்தது.
ஆனால் இன்றோ.. எல்லோரும் விமானத்தில் ஏறி அமர்ந்து எங்கும் பயணம் செய்யலாம் என்ற நிலை வந்துள்ளது.
இப்படிப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் எதுவும் மந்திரத்தால் வந்ததில்லை; மகத்தான மனித ஆற்றலால் வந்தது. விடாமுயற்சியால் வானம் வசப்பட்டது ரைட் சகோதரர்களுக்கு” என்று சொல்லி முடித்தார் கோமாளி.
விடா முயற்சியே வெற்றிக்கு வழி என்பதை உணர்ந்த மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் மகிழ்ந்தபடி வானில் பறப்பதுபோல் பறந்து சென்றனர்.
(மீண்டும் வருவார் கோமாளி)