சூரியன்
வட்ட மாக உதித்துமே
வானில் வரும் சூரியன்!
திட்ட மாகக் கிழக்கெனும்
திசையில் வரும் சூரியன்!
கட்டுக் குலைந்து இருட்டுமே
களைய வரும் சூரியன்!
பட்டு ஒளியும் புவிக்கெலாம்
பரவ வரும் சூரியன்!
கொட்டி சேவல் முழக்கியே
கூவ வரும் சூரியன்!
தட்டி ஊரை எழுப்பவே
தாவி வரும் சூரியன்!
பட்டு முகில் முகட்டிலே
பளப ளக்கும் சூரியன்!
மட்டிலா மின்சாரமும்
மகிழத் தரும் சூரியன்!
சொட்டும் பனி விரட்டியே
சூடு தரும் சூரியன்!
கொட்ட விடும் வியர்வையை
கோடை காலச் சூரியன்!
விட்டு விட்டு மேகமும்
விழுந்து மூடும் சூரியன்!
கட்டி முகில் கலைந்ததும்
காட்சி தரும் சூரியன்!
பொட்டுப் போல மேற்கிலே
பொலியும் மாலைச் சூரியன்!
நெட்டை மலைக் கோட்டையுள்
நிதமும் மறையும் சூரியன்!
எட்டி என்றும் பார்வையில்
இருக்கும் அந்தச் சூரியன்
ஒட்டி வந்து தேர்தலில்
உதவும் சின்னம் சூரியன்!<
– தளவை இளங்குமரன், தென்காசி