ஜூலை 15 – கல்வி நாள் : இயற்கைப் பாடங்கள்!
பள்ளிக் கூடம் மட்டும்தான்
படிப்பைத் தருமென் றெண்ணாதே;
புள்ளும் விலங்கும் பூச்சிகளும்
புதிய பாடம் கற்பிக்கும்:
கவளச் சோற்றைக் கண்டிட்டால்
காகம் காட்டும் ஒற்றுமையை;
குவளைப் பாலை அருந்திடும்நாய்
குழைக்கும் வாலை நன்றியுடன்;
உழைப்பின் மாண்பைக் கற்பிக்கும்
ஓயாத் தேனி நாள்தோறும்;
இழையும் எறும்பின் சுறுசுறுப்போ
எல்லோ ருக்கும் உயர்பாடம்:
சேவல் தினமும் கற்பிக்கும்
சிறப்பாய் நேரந் தவறாமை;
காவல் புரியும் நாய்கூடக்
கடமை மாண்பைக் கற்பிக்கும்:
தாய்மை பாசக் கல்விக்குத்
தரையில் பசுப்போல் வேறேது?
வாய்ப்பின் மாண்பைக் கற்பிக்கும்
வாடி நிற்கும் கொக்கிங்கே:
புத்த கங்கள் எல்லாமே
பொருந்தும் அறிவைத் தந்தாலும்
நித்தம் இயற்கை வழியாய்நீ
நிறைய பாடம் கற்றிடலாம்!
– கே.பி.பத்மநாபன்,
சிங்காநல்லூர், கோவை