அழகுதமிழ் நீதிநெறி
குரங்குக்கு மழைநேரம்
கூறப்போன அறிவுரையால்
வருந்திற்று கூடிழந்து
வாட்டமுற்றுத் தூக்கணம்!
வாய்திறந்து காக்கையினை
வஞ்சகமாய்ப் பாடச்சொல்லி
வாய்விட்டு வீழ்ந்துவிட்ட
வடைபுசித்த குள்ளநரி!
தான்இட்ட முட்டையுடன்
தன்கூட்டில் குயில்முட்டை
தான்அதையும் பொரித்துக்குஞ்சு
தயவுடனே தரும்காகம்!
வேட்டுவனின் காலில்கொட்டி
வீசுமவன் வேலும்பட்டு
காட்டுப்புறா மாளாமல்
காத்தசிறு கட்டெறும்பு!
கண்ணுறங்கும் குழந்தையினைக்
கடிக்கவந்த நல்லபாம்பைத்
துண்டுதுண்டாய்க் கடித்தெறிந்து
தூய்நன்றி காட்டியநாய்!
பற்றித்தமைத் தாம்புசிக்கப்
பாய்ந்துவந்த வேங்கையினை
ஒற்றுமையாய்த் தாமெதிர்த்து
ஓட்டிவிட்ட எருமைத்திரள்!
அறுந்துபல முறைவிழுந்தும்
அயராமல் முயன்றுவலை
முறையாகப் பின்னியதை
முடித்துவிடும் சிறுசிலந்தி!
சிறுவர்களின் பாடங்களில்
சிறந்தகதைப் பாடல்களில்
அறியும்படி ஓதிவரும்
அழகுதமிழ் நீதிநெறி!
– தளவை இளங்குமரன்
இலஞ்சி, தென்காசி மாவட்டம்