அனுபவம்:நான் பார்த்த கொள்ளிவாய்ப் பிசாசு
அந்த நாள் ஒரு கோடை விடுமுறையின் மாலை நேரம். மயிலாடுதுறையில் தென்னக ரயில்வேயின் தெற்குக் குடியிருப்புப் பகுதி. அந்தக் குடியிருப்பில் கிழக்கு, மேற்காக எதிர் எதிராக 20 வீடுகள் இருக்கும். தெற்கு பார்த்த 6 வீடுகளும், 6 வீடுகளில் இருந்து கொஞ்சம் தள்ளி கிழக்குப் புறமாக மேற்கில் 6 வீடுகளும் தனித்து இருக்கும். அந்தக் கடைசி வீட்டின் எதிரே ஒரே ஒரு வேப்பமரம் இருக்கும். அந்தக் குடியிருப்பில் அந்த ஒரே ஒரு மரம்தான். மற்ற ஒரு சில மரங்கள் அவரவர் வீட்டுக் கொல்லையில்தான் இருக்கும். அதனால் அங்கே உள்ள அனைத்து சிறுவர் சிறுமியரும் பகலில் விளையாட வேண்டும் என்றால் அந்த மரத்தின் நிழலில்தான் விளையாடுவார்கள்.
“அந்தக் கடைசி வீட்டு மரத்தில் கொள்ளிவாய்ப் பிசாசு இருக்கு; மாலை 6 மணிக்கு மேல் அங்கு யாரும் விளையாடதீங்க. உங்களைப் பிடித்துக்கொண்டு விடும்” என்று கூறுவார்கள். அந்தக் கடைசி வீட்டுப் பையன்கள் இருவரும் கூட “ஏய், 6 மணிக்கு மேல் வேப்பமரத்துக்கிட்ட விளையாடதீங்க; கொள்ளிவாய் பிசாசு பிடித்துக்கொள்ளும்” என்பார்கள்.
பொதுவாக 1987-88ஆம் ஆண்டுகளில் மாலை 6 மணிக்கு மேல் குழந்தைகளை விளையாட அனுமதிக்கமாட்டார்கள். கட்டாயம் வீட்டிற்குள் வந்து கை, கால்களைக் கழுவி விட்டு பாடங்களைப் படிக்க வேண்டும். கோடை விடுமுறை என்பதால் ஒரு சில வீடுகளில் மட்டும் ஆறரை மணி வரை விளையாட அனுமதிப்பார்கள். அதற்கே அந்த கடைசி வீட்டு அம்மா, “ஏய், பிசாசு வரும் நேரம் ஓடிப்போங்கள்’’ என்று விரட்டிவிடுவார்கள். ஆனால் இரவு 7 மணி போல் அவர்கள் வீட்டு எருமை மாடுகளை அந்த மரத்தில் கட்டிப் போட்டு இருப்பார்கள். துடுக்கான சில சிறுவர்கள் மட்டும் அவர்கள் வீட்டுப் பையன்களிடம், “உங்க வீட்டு எருமை மாடுகளை மட்டும் கட்டிப்போடுகிறீர்களே, எருமை மாட்டை கொள்ளிவாய்ப் பிசாசு பிடித்துக்கொள்ளாதா?’’ என்று கேட்பார்கள். அதற்கு அந்த அம்மா, “எருமை எமனின் வாகனம் அதனால் பிசாசு ஒன்றும் செய்யாது’’ என்பார்கள். “எங்களுக்கு கொள்ளிவாய்ப் பிசாசைக் காட்டினால்தான் நாங்கள் நம்புவோம்” என்றனர் சிறுவர்கள். அதில் என் அண்ணனும் ஒருவர். “இப்போதெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாது.” இரவு 10 மணிக்கு மேல் உங்கள் வீட்டிலிருந்து ஒளிந்து கொண்டு பாருங்கள் தெரியும் என்றார், அந்த அம்மா. நேரில் வந்தால் அந்த பிசாசு பிசாசு பிடித்துக்கொண்டு விடுமாம்.
அக்கம் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் பேசி வைத்துக்கொண்டு இரவு 10 மணிக்குமேல் சிறுநீர் கழிக்கச் செல்வது போல் தெருப்பக்கம் வந்தால் உண்மையாகவே அந்த மரத்தில் நெருப்பு தெரிகிறது. அங்கும், இங்கும் ஆடுவது போல் தெரிகிறது. அண்ணனோடு சென்று பார்த்த எனக்குக் காய்ச்சலே வந்துவிட்டது. வீட்டிற்குள் வந்து பயந்து கொண்டு அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டேன். ‘ஏன்? என்னாச்சு’ என்று அம்மா கேட்க, நான் பதில் சொல்லாமல் அழுதுகொண்டே இருந்தேன். அதனால் அண்ணனுக்குத் திட்டு விழுந்தது. என்ன செய்தீர்கள்? போகும் போது நல்லாப் போன 10 நிமிடத்தில் காய்ச்சலோடு வந்திருக்கிறாள் எனத் திட்ட, அண்ணன், “கொள்ளி வாய்ப் பிசாசைப் பார்த்து விஜி பயந்துவிட்டது’’ என்றார்.
என் அப்பா ஓய்வு பெற்ற ராணுவ வீரர். ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். அவர் உடனே, “பேயாவது பிசாசாவது என்ன உளறுறீங்க?” என்றார். என் அண்ணனும், நானும் சேர்ந்து முன் கதையைக் கூறினோம். என் அப்பா, அம்மா இருவருமே ‘அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை’ என்று கூறினர். என் அப்பா, “வா நேரில் போய் மரத்துகிட்ட போய் பார்த்து விடுவோம்’’ என்று கூறினார். நான் பயந்து கொண்டு அம்மாவைப் பிடித்துக்கொண்டு வரமாட்டேன் என்று கூறிவிட்டேன். என் அப்பா, அண்ணன்கள், பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் எல்லோரும் சேர்ந்து கையில் டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு வேப்பமரத்தடிக்குச் சென்றார்கள். சிறுவர்களுக்கு, உள்ளுக்குள் பயம்தான் என்றாலும், என் அப்பா இருப்பதாலும் உண்மையில் கொள்ளிவாய்ப் பிசாசு இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தாலும் உடன் சென்றார்கள். அருகில் சென்று மரத்தின் அடியில் இருந்து டார்ச் லைட் அடித்துப் பார்த்தாலும் நெருப்புப் பொறியும், அது ஆடுவதும் தான் தெரிகிறது. “ஏய், மரத்தில் ஏறிப் போய் பாரு’’ என என் அண்ணனை மரத்தில் ஏற்றிவிட்டார் என் அப்பா. அந்த மரம் நன்கு வளைந்து கொப்பும், கிளைகளுடனும் சிறுவர்கள் ஏறி விளையாடும் வகையில்தான் இருக்கும். ஏறிப் பார்த்தான் என் அண்ணன்.
(கீழே இருந்தவர்கள் “திக் திக்’’ மனத்துடன் இருந்தனர்.)
மரத்தின் கிளையில் இரண்டு தேங்காய் நார்க் கயிற்றைத் தொங்கவிட்டு அதில் நெருப்பைப் பற்ற வைத்து இருக்கிறார்கள். காற்றில் கயிறு ஆடும்போது நெருப்புப் பொறியும் பறக்கிறது, ஆடுகிறது. அந்தக் கயிற்றை அவிழ்த்துக்கொண்டு அண்ணன் இறங்கி வந்தவுடன் சிறுவர்களிடையே ஒரே கும்மாளம், கூச்சல். அந்த வீட்டம்மா பதறிக்கொண்டு வெளியில் வர, என் அப்பா அவர்களிடம் பெரிய சண்டையே போட்டுவிட்டு வந்தார். “உங்கள் வீட்டு எருமை மாட்டைக் கட்டிப் போடுவதற்காக வீணாக ஏன் குழந்தைகளைப் பயமுறுத்தினீர்கள்?” என்று.
வீட்டிற்கு வந்து என்னிடம் அந்தக் கயிற்றைக் காண்பித்து உண்மையைச் சொன்ன பிறகும்கூட காய்ச்சல் நிற்க 2 நாட்கள் ஆயிற்று. ஆனால், அதற்குப் பிறகு யார் எதைச் சொன்னாலும் பயப்படுவதே இல்லை..