தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்
கே.பாண்டுரங்கன்
PREPOSITION[முன்னிடைச்சொல்]
அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு செய்தி: சென்னை விமானநிலையத்தில் அறிவிப்புப் பலகை ஒன்றில் எழுதப்பட்ட வாசகம்…
“Eating Carpet is strictly prohibited”
இதைத் தமிழ்ப்படுத்தினால்..
“தரை விரிப்பை உண்பதற்கு இங்கே தடை விதிக்கப்படுகிறது!”
-_ என்று பொருள் வரும்.
உண்மையில் அது எப்படி இருந்திருக்க வேண்டும்?
Eating on carpet is strictly prohibited
-_ என்றுதான் இருந்திருக்க வேண்டும்.
இந்தச் சொற்றொடரைத் தமிழ்ப்படுத்தினால்…
“தரை விரிப்பின் மேல் அமர்ந்து உண்பதற்கு இங்கே தடை விதிக்கப்படுகிறது.”
_ என்ற சரியான பொருள் வரும்!
முன்னிடைச்சொல் [Preposition] எதற்குத் தேவை என்று இப்போது புரிகிறதல்லவா?
ஆங்கிலத்தில் ஏறத்தாழ 150க்கும் மேல் Preposition கள் உள்ளன.
நாம் சில Preposition களை மட்டும் பயன்படுத்திப் பார்ப்போம்.
கடந்த இதழில் Preposition of Places க்கு (இடம் சார்ந்த முன்னிடைச்சொல்) எடுத்துக்காட்டுகள் பார்த்தோமல்லவா?
‘பெட்டிமுறை’_ப்படி, ‘பந்து’ பெட்டியின் வெவ்வேறு இடங்களில் இருக்கும்போது, வெவ்வேறு சரியான Preposition -களைப் பயன்படுத்தினோம்.
இடம் சார்ந்த முன்னிடைச் சொல்லுக்கு (Preposition of Places) மேலும் சில எடுத்துக்காட்டுகள் பார்ப்போமா?
The Aeroplane flies over the sea.
The Aeroplane flies on the sea.
The Aeroplane flies above the sea.
இந்த Aeroplane எடுத்துக்காட்டை ஏற்கெனவே பாத்திருப்பீர்கள்! மேலே சொன்ன மூன்று சொற்றொடர்களில் எதில் சரியான Preposition உள்ளது?
The Aeroplane flies over the sea
என்பதே சரியான Preposition கொண்ட சொற்றொடர். ஏனெனில், மற்ற இரண்டும் அதற்கு சரியான பொருள் தராது. ஏன் என்று கூறுகிறேன். கேளுங்கள்!
‘Over’ என்றாலும்,
‘Above’ என்றாலும்,
‘‘Upon’ என்றாலும்,
‘On’ என்றால் ‘மேலே’ என்றுதான் பொருள்.
ஆனால், எந்தெந்த இடத்தில் எதனைப் பயன்படுத்துவது என்பதை நாம் குழப்பமில்லாமல் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? எடுத்துக்-காட்டாக…
கீழே உள்ள மூன்று படங்களைப் பார்த்தால் தெரியும்.
* (கடல் நீரில்) மேற்பரப்பிலேயே நிலையாக நிற்கின்ற பொருளுக்கு ‘On’ (‘மேல்’) என்னும் ‘Preposition’ பயன்படுத்தப்படும். (அதாவது பெட்டியின் மேல் பந்து நிலையாக இருப்பதுபோல்)
1) The big ship is floating on the sea.
2) அந்தப் பெரிய கப்பல் கடலின் மேல் மிதந்து கொண்டிருக்கிறது. (நிற்கிறது)
2) The ball is on the box.
அந்தப் பந்து பெட்டியின் மேல் உள்ளது.
* மேற்பரப்பில் நீரைத் தொடாமல் நீருக்கும் மேலே மேல்நோக்கி நிற்கும் அல்லது செல்லும் பொருளுக்கு ‘Above’ (அதற்கும் மேலே) எனும் Preposition அல்லது ‘Upon’ (அதற்கும் மேலே) எனும் Preposition பயன்படுத்தப்படும்.
1) The sun rises above / upon the sea.சூரியன் கடலின் மேலே (செங்குத்தாக) எழுகிறது.
2) The Periyar picture is fixed above / upon the calendar.
பெரியார் படம் நாள்காட்டிக்கு மேலே பொருத்தப்பட்டுள்ளது.
* ஒரு பொருள் நீருக்கும் மேலே (குறுக்காக) இயங்கியபடி இருந்தால் ‘Over’ எனும் Preposition பயன்படுத்தப்படும்.
1) The Aeroplane Flies over the sea.
விமானம் கடலின் மேலே (குறுக்கே) பறக்கிறது.
2) The cat jumps over the bed.
அந்தப் பூனை கட்டிலின் மேலே (தாவியபடி குறுக்கே) குதிக்கிறது.
இங்கு சொன்னதையெல்லாம் மனக்கண்ணால் கற்பனை செய்து பாருங்கள். இப்போது உங்களுக்கு On, Above, Upon, Over வேறுபாடு புரிந்திருக்குமே! அடுத்த இதழில்…
Preposition of Time (காலம் சார்ந்த முன்னிடைச்சொல்)
Preposition of Cause (காரணம் சார்ந்த முன்னிடைச்சொல்) ஆகியவற்றைப் பார்ப்போம். மேலும் சரியான Preposition – தவறான Preposition இரண்டையும் கண்டுபிடிக்க ஒரே ஓர் அட்டவணை மட்டும் பார்ப்போமா?
(தொடரும்…)