பெரியார் உலகம் படைபோம் வா!
பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,
எல்லாரும் எப்படி இருக்கீங்க?
பள்ளிகள் உயர்நிலைகளில் திறந்து விட்டதால் உங்களுக்கு ஒரே கொண்டாட்டம் – மகிழ்ச்சி. காரணம், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை நேரில் பார்த்துக் கலந்துரையாடிடும் வாய்ப்பு சுமார் ஓராண்டுக்குப் பிறகு இப்பத்தானே கிடைச்சிருக்கு – இல்லையா?
என்றாலும், ‘முகக்கவசம், கிருமி நாசினி, இடைவெளி, எல்லாம் பற்றி கவனமாக இருக்க வேணும்.’ ஞாபகம் இருக்கா?
உங்களுக்கெல்லாம் மற்றொரு துள்ளல் மகிழ்ச்சிச் செய்தி என்ன தெரியுமா?
திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள ‘பெரியார் உலகம்’ என்ற சுமார் 35 ஏக்கர் நிலப்பரப்பில் பெரியார் தாத்தா அவர்களின் 95 அடி உயரச் சிலை + 40 அடி அடிபீடம் – மொத்தம் 135 அடியில் கம்பீரமாக நிற்கப் போகிறார் பெரியார் தாத்தா!
அது மட்டுமா? உங்களுக்கெல்லாம் உல்லாசமாக பொழுதுபோக்குக்குக் குழந்தைகள் நூலகம், பெரியார் வாழ்க்கை வரலாறு, போராட்டக் களங்களின் ஒலி_ஒளிக் காட்சி, அறிவியல் அறிவுலகம், கோளரங்கம் இப்படிப் பலப்பல அம்சங்கள். சுமார் 15 ஆண்டுகால வேலைத்திட்டம். இதில் இப்போது 6, 7 ஆண்டுகள் ஓடிவிட்டன. சில சில அடிக்கட்டுமானப் பணிகளில் ஒரு சிறு அளவு துவக்கப்பட்டுள்ளது. 7 தடையில்லாச் சான்றிதழ்கள் (NOC) கிடைத்தும் ஒரே ஒரு அனுமதிச் சான்றிதழை பழைய அ.தி.மு.க. அரசு தராமல் 4, 5 ஆண்டுகளாக அப்படியே வைத்தது.
பெரியார் தாத்தாவும் திராவிடர் இயக்கமும் உங்களுக்கு என்னவெல்லாம் செய்துள்ளார்கள் என்பதை நீங்கள் சில மணி நேரத்தில், பல புத்தகங்களில் படிக்க வேண்டியவைகளைப் பார்த்து, தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக பெரியார் உலகத்தில் பார்த்துக் கற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்படுகிறது!
அமெரிக்காவில் ‘டிஸ்னி வேர்ல்டு’ (Disney World) எப்படி பல அம்சங்களைக் கொண்டு அமைந்துள்ளதோ, அதுபோல ‘பெரியார் உலகம்’ (Periyar World) அமையும்!
அதில் அறிவியலின் வியத்தகு வரலாற்றுச் சாதனைகள், சந்தித்த எதிர்ப்புகள், வெற்றிகள் பலவும் இடம் பெறும்.
பெரியார் தாத்தா பிறப்பதற்கு முன் _ அவர் பிறந்து, நமக்காக, நம் உரிமைகளுக்காகப் போராடியதற்குப் பின் சமூக, பண்பாட்டு, மொழி, உரிமை தளத்தில் _ பகுத்தறிவு முனையால் எப்படி சுயமரியாதைச் சூடு அனைவருக்கும் போட்டார் என்ற பாடங்களைக் கற்கும் வண்ணம் காட்சியகம் இருக்கும்.
மெழுகுப் பொம்மை அரங்கம் இருக்கும்! பெரியார் நூலகம் _ ஆய்வகம் இருக்கும்.
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை எப்படி திராவிடம் முறியடித்தது என்பதை விளக்கும் வகையில் அமைவதோடு, நமது வேர்களின் விழுமியங்கள் -_ மதிப்பீடுகள் பற்றிய விளக்கங்கள் இடம் பெறும்!
தமிழ்நாட்டுப் பேரதிசயங்களில் ‘பெரியார் உலகம்’ முதன்மையானது என்று உலகத்தார் முதல் உங்களைப் போன்ற குழந்தைகள் வரை ஒப்புக் கொண்டு மகிழ்ச்சியால் துள்ளி ஆடும் வகையில் அது அமையும்.
அதற்காக நீங்களும் வீட்டுக்கு ஒரு உண்டியல் வைத்து, நாளும் சேரும் சில்லரை முதல் சேமிப்பின் ஒரு பகுதி நன்கொடை வரை தாராளமாகத் தரத் தூண்டும் திட்டம் உண்டு!
‘பெரியார் உலகம்’ நமது பெரும் கனவுலகம்! காண்போம் விரைவில்! கடமையாகக் கருதி உதவுவோம் என்று உங்கள் தோழர்களுக்கும் கூறி, இணையதளத்திலும் இதுபற்றி பரப்பி கலந்துரையாடுவதை ஒரு முக்கியப் பணியாகக் கொள்ளுங்கள் பிள்ளைகளே!
‘இனிவரும் உலகம்’ என்ற புத்தகத்தில் பெரியார் தாத்தா அன்று கூறியவை எல்லாம் இன்று நம் கண்ணெதிரே, காணொலிக் காட்சி மூலம், ஆன்லைன் படிப்பு, வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பயன் பெறுகிறோம், பார்த்தீர்களா?
பெரியார் உலகம் ஓர் அறிவியல் தொழில் நுட்பத்தின் குழந்தை _ அற்புதங்களின் உச்சம்! காண வாரீர், பெரியார் உலகை!
இப்படிக்கு,
உங்கள் பிரியமுள்ள
ஆசிரியர் தாத்தா,
கி.வீரமணி