தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 26
கே.பாண்டுரங்கன்
இதுவரை உரையாடல் சொற்றொடரில்…
இடப்புறம் பேசுபவர் பகுதியைப் பார்த்தோம். இனி…
வலப் புறம் மட்டும் பார்ப்போம்
அதுதான் பேசுகின்ற பகுதி (Reported Speech) அல்லது உரையாடல் பகுதி. அதாவது “அடைப்புக் குறி”க்குள் உள்ள பகுதி.
ஒரு பரிசல் அல்லது படகு மூலம் ஆற்றில் பயணம் செய்வதாயிருந்தால் என்ன செய்வோம்?
துடுப்பைக் கொண்டு காற்றின் திசையறிந்து நீரைக் கிழித்து, முழுவிசையுடன் முன்னேற முயற்சிப்போம் அல்லவா?
இந்தப் படகை எதிர்ப் பகுதிக்கு அதாவது அயல் பகுதிக்குக் கொண்டு செல்ல துடுப்பு போன்ற சில வழிமுறைகளைக் கையாள வேண்டுமல்லவா?
உரையாடலும் அப்படித்தான். எதையாவது நம் விருப்பத்திற்குப் பேசிவிட முடியாது. நேர்க் கூற்றில் உள்ள சொற்றொடர் இக்கரையில் உள்ள படகு போல. இதனை அக்கரைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதாவது அயற்கூற்றுக்கு மாற்ற வேண்டும்.
அப்போது செய்யவேண்டியவை என்ன?
அதற்கு, மொத்தம் 6 வழிமுறைகள் (6 steps) உள்ளன. (முதலில் சுருக்கமாகப் பார்ப்போம்)
1. முதலில் அடைப்புக்குறியை (Inverted commas) நீக்க வேண்டும்.
2. இணைப்புச் சொல்லை (Conjunction) போட வேண்டும்.
3. பிரதிப் பெயர்ச் சொல்லை (Pronoun) மாற்ற வேண்டும்.
4. காலத்தை (Tense) மாற்ற வேண்டும்.
* நிகழ் காலமாக (Present tense) இருந்தால் இறந்த காலமாக (Past tense) மாற்ற வேண்டும்.
(பேசுபவர் பகுதி நிகழ் காலத்தைக் குறிப்பதாக இருந்தால் பேசுகின்ற பகுதியில் நிகழ் காலத்தை மாற்ற வேண்டியதில்லை).
உலக உண்மைகள், பழமொழிகள் போன்றவையும் நிகழ் காலத்திலிருந்து மாறாமல் நிகழ் காலமாகவே இருக்கும்.
* இறந்த காலமாக (Past tense) இருந்தால் இறந்த கால வினைமுற்றுக்கு (Past perfect tense) மாற்ற வேண்டும்.
5. காலமும் இடமும் சார்ந்த சொற்களை (Time and place) மாற்ற வேண்டும்.
சில சொற்கள் நேர்க் கூற்றுக்குப் பொருத்தமாகவும் அயற்கூற்றுக்குப் பொருத்தமில்லாததாகவும் இருக்கும். அவற்றை (வரும் அட்டவணைக்கேற்ப) புதிய சொல்லாக மாற்ற வேண்டும்.
6. ஆங்கில இலக்கண அமைப்புப்படி சொற்களை இடமாற்றம் (Placement மாற்றத்தை) செய்ய வேண்டும்.
அவ்வளவுதான்…
நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு எளிதாக, அழகாக மாற்றி விடலாம் _ குழப்பமில்லாமல்!
ஏற்கெனவே நேர்க்கூற்று-அயற்கூற்றுக்கு பல வகையான எடுத்துக் காட்டுகளைப் பார்த்திருக்கின்றோம். ஆனால், அதன் வழிமுறைகளை (Steps) இப்போதுதான் பார்க்கிறோம்.
மொத்தம் 6 முறைகள் (6 Steps) (விரிவாக)
(வழிமுறை) Step : 1
முதலில் [“ ”] அடைப்புக்குறியை நீக்க வேண்டும். அதாவது Inverted commas-அய் நீக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு:
நான் சொல்கிறேன், “நீ ஒரு நல்ல மனிதன்” (நேர்க்கூற்று)
நான் சொல்கிறேன் அவன் ஒரு நல்ல மனிதனாய் இருக்கிறான் என்று. (அயற்கூற்று)
I say, “you are a good person” (Direct Speech)
I say that he is a good person (Indirect Speech)
இரண்டாவதாக எழுதப்பட்டுள்ள அயற்கூற்றில் (Indirect Speech-இல்) அடைப்புக் குறிகள் நீக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்.
(வழிமுறை) Step : 2
Conjunction (இணைப்புச் சொல் வழிமுறை)
கீழேயுள்ள இணைப்புச் சொற்களை மட்டும் நன்றாகக் கவனியுங்கள்!
எ-கா : 1 சாதாரண உரையாடல்
தமிழ்மணி தங்கமணியிடம் சொன்னார், “நான் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன்’’ (நேர்க்கூற்று)
தமிழ்மணி தங்கமணியிடம் தான் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்ததாகச் சொன்னார். (அயற்கூற்று)
Thamizhmani said to Thangamani, “I am doing health-exercise” (Direct Speech)
Thamizhmani told Thangamani that he was doing health-exercise. (Indirect Speech)
எ-கா : 2 கட்டளை உரையாடல்
தமிழ்மணி தங்கமணியிடம் சொன்னார், “எழுந்திரு!” (நேர்க்கூற்று)
தமிழ்மணி தங்கமணியிடம் எழுவதற்கு அறிவுறுத்தினார். (அயற்கூற்று)
Thamizhmani said to Thangamani, “Get up!”
(Direct Speech)
Thamizhmani advised Thangamani to get up.
(Indirect Speech)
எ-கா : 3 கேள்வி உரையாடல்
தமிழ்மணி தங்கமணியிடம் சொன்னார், “நன்றாகத் தூங்கினீர்களா?” (நேர்க்கூற்று)
தமிழ்மணி தங்கமணியிடம் நன்றாகத் தூங்கினாரா என வினவினார். (அயற்கூற்று)
Thamizhmani said to Thangamani, “Did you sleep well?” (Direct Speech)
Thamizhmani asked Thangamani if/whether he slept well. (Indirect Speech)
எ-கா : 4 உணர்ச்சி உரையாடல்
தமிழ்மணி தங்கமணியிடம் சொன்னார், “என்னே அருமை! நீங்கள் செய்த உணவு!” (நேர்க்கூற்று)
தமிழ்மணி தங்கமணியிடம் அவர் செய்த உணவு மிக நன்றாக இருந்தது என்று வியந்தார். (அயற்கூற்று)
Thamizhmani said to Thangamani, “wow! what a tasty food you cooked|” (Direct Speech)
Thamizhmani exclaimed Thangamani that he cooked very tasty food. (Indirect Speech)
(வழிமுறைகள் தொடரும்)